பெங்களூரு
பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர், ஜெயலலிதாவின் உண்மை மகள் தானே என்றும், டி என் ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மற்றும் குடியரசு தலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா திருமணம் செய்துக் கொள்ளவில்லை. ஆனால் வெகு நாட்களுக்கு முன்பு ஒரு வாரப் பத்திரிகையில் தனக்கும் தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுக்கும் காதல் இருப்பதாகவும் இருவரும் கோயிங் ஸ்டடி முறையில் வாழ்வதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் அவர்களுக்கு குழந்தை இருந்ததாக தகவல் இல்லை.
ஆனால் பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்கிற அம்ருதா (வயது 38) என்பவர் தற்போது ஜெயலலிதாவின் மகள் தானே என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் குடியரசு தலைவர், பிரதமர், தலைமை நீதிபதி ஆகியோருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:
”சந்தியா – ஜெயராம் தம்பதிகளின் குழந்தைகளில் என் தாய் ஜெயலலிதா என அழைக்கப்படும் கோமளவல்லியும் ஒருவர். அவருடைய மகள் நான். எனது பெயர் மஞ்சுளா என்னும் அம்ருதா. எனது பாட்டி சந்தியாவின் மரணத்துக்குப் பின் என் தாய் தனித்து வாழ்ந்தார். அப்போது அவருக்கு ஆறுதலாக இருந்தவர் தெலுங்கு நடிகர் சோபன் பாபு. ஆதரவு காதலாக மாறி விட்டதால் இருவரும் போயஸ் வீட்டில் சேர்ந்து வாழ்ந்தனர். சோபன் பாபு ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் இருவரும் திருமணம் செய்துக் கொள்ள முடியவில்லை. கோயிங் ஸ்டடி முறையில் வாழ்ந்ததாக அவரே தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் என் தாய் (ஜெயலலிதா) கர்ப்பமானார்.
நான் ஜெயலலிதாவுக்கு 1980 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி பிறந்தேன். எங்கள் குடும்பம் மிகவும் ஆசாரமானது என்பதால் என்னை குடும்பத்தில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என நினைத்த என் தாய் தனது தூரத்து உறவினரான சைலஜா – சாரதி தம்பதியினரிடம் என்னை ஒப்படைத்தார். என்னை அவர்கள் தங்கள் குழந்தை என்றே கூறி வளர்த்து வந்தனர். அவர்களிடம் என் தாய் இந்த விவரத்தை சொல்லக் கூடாது என சத்தியம் வாங்கி உள்ளார் என பிறகு கேள்விப்பட்டேன்.
எனது வளர்ப்பு தாய் சைலஜா 1996ல் என்னை ஒரு கடிதத்துடன் சென்னை போயஸ் இல்லத்துக்கு அனுப்பினார். என்னைக் கண்டதுடன் கட்டி அணைத்த ஜெயலலிதா என்னிடம் பாசத்தை கொட்டினார். அது எனக்கு அப்போது வியப்பாக இருந்தது. பிறகு பலமுறை அவரை சந்தித்த போதும் அவர் என் தாய் என்பதை எனக்கு தெரிவிக்கவே இல்லை. எந்தக் காரணத்தை முன்னிட்டும் நான் சினிமாத்துறையிலோ அரசியலிலோ ஈடுபடக் கூடாது என கண்டிப்பாக கூறி இருந்தார்.
தற்போது என் தாய் ஜெயலலிதா இறந்த பின் போயஸ் இல்லத்துக்கு தீபா, மற்றும் தீபக் உரிமையாளர்கள் எனக் கோரும் செய்தி வெளியானது. இதைக் கண்ட என் உறவினர் ஜெயலட்சுமி நான் ஜெயலலிதாவின் மகள் என்னும் உண்மையை தெரிவித்தார். பசவனகுடியில் வசித்து வரும் மற்றொரு உறவினரான லலிதாவும் இதை உறுதிப் படுத்தினார். ஜெயலலிதாவின் பிரசவ சமயத்தில் லலிதாவும், ரஞ்சினி ரவீந்திர நாத் என்பவரும் தான் உடன் இருந்தனர். எனவே அவர்களுக்கு என் பிறப்பு பற்றிய உண்மை தெரிந்துள்ளது.
என் தாய் ஜெயலலிதா இயற்கையாக மரணம் அடையவில்லை. உடல்நிலை பாதிப்பு அவர் மரணத்துக்கு உண்மை காரணமில்லை. 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். என் தாய் மரணத்துக்கு சசிகலா உட்பட பலரும் காரணம். எனவே உச்ச நீதி மன்றத்தின் மேற்பார்வையில் சி பி ஐ உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். சசிகலா நடராஜன், தினகரன், தீபக் ஜெயகுமார், மற்றும் ஷீலா பாலகிருஷ்ணனை விசாரிக்க வேண்டும். அவர் உடலை தோண்டி பிரேத பரிசோதனை நடத்த வேண்டும்.
இது ஒரு மகளாக எனது கோரிக்கை. அவர் தான் என் தாய் என்பதை நிரூபிக்க டி என் ஏ சோதனை நடத்த வேண்டும். நான் அந்த மரபணு சோதனைக்கு தயாராக உள்ளேன்” என அந்த கடிதத்தில் மஞ்சுளா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போதே, வேறு ஒரு பெண்மணி தன்னை ஜெயலலிதாவின் மகள் என்று கூறி, அரசு பணிகள் பலவற்றை முடித்துதருவதாகச் சொல்லி ஏமாற்றியதும் அவர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.