போபால்

த்தியப் பிரதேசத்தில் பலாத்காரத்தில் இருந்து ஒரு பெண்ணை ஒரு தெரு நாய் காப்பாற்றி உள்ளது.

மத்தியப் பிரதேசம் போபால் நகரில் சோலா பகுதியில் ஒரு பெண்ணும் அவர் கணவரும் வசித்து வந்தனர். அந்த தெருவில் ஆதரவற்று திரிந்த வந்த ஒரு தெருநாய்க்கு அந்தப் பெண் தொடர்ந்து உணவு அளித்து வந்தார். அந்த நாய் அந்த பெண்ணின் வீட்டிலேயே தங்க ஆரம்பித்தது. அதே தெருவில் சுனில் என்பவர் வசித்து வந்தார். அவர் அந்தப் பகுதி பெண்களை கேலி செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த ஞாயிறு அன்று மதியம் சுமார் 3 மணிக்கு அந்தப் பெண்ணின் கணவர் வெளியே சென்றுள்ளார். அந்தப் பெண் ஓய்வெடுத்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது சுனில் அங்கு வந்து கதவை தட்டி உள்ளார். யாரென்று தெரியாமல் கதவை திறந்த பெண்ணை தள்ளிவிட்டு கதவை சாத்திய சுனில் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அவர் அப்போது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அதே அறையில் ஒரு மூலையில் படுத்திருந்த அந்த நாய் அவரை நோக்கி குரைத்தபடி மேலே பாய்ந்துள்ளது. அதனால் பயந்து போன சுனில் அந்தப் பெண்ணை விட்டு விட்டார். வெளியே ஓடிய அந்தப் பெண் அக்கம் பக்கம் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். நாயை கத்தியால் சுனில் தாக்கி உள்ளார். அதனால் நாயின் முன் முழங்காலில் இரத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அக்கம்பக்கம் உள்ளோர் கூடியதால் சுனில் தப்பி சென்று விட்டார். பிறகு அந்தப் பெண்ணும் அவர் கணவரும் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். தப்பி ஓடிய சுனிலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.