ஃபரிதாபாத்

ஃபரிதாபாத்தில் ஒரு மாணவி தன்னிடம் பணிபுரிந்த சிறுமியை மிகவும் கொடுமை செய்துள்ளார்.

ஃபரிதாபாத் செக்டர் 34ல் வசிக்கும் பொறியியல் கல்லூரி மாணவி சினேகா யாதவ் (வயது 22).  இவருடைய தந்தை பாட்னாவில் ஒரு குவாரி அமைத்துள்ளார்.   ஃபரிதாபாத்தில் தனியாக வசித்து வரும் தன் மகளுக்கு உதவியாக தனது குவாரியில் பணி புரியும் தம்பதியரின் 13 வயது சிறுமியை அனுப்பி உள்ளார்.    மேல் மாடியில் வசித்து வந்த சினேகா அந்த குடியிருப்பில் உள்ள யாருடனும் பேசுவதோ பழ்குவதோ கிடையாது.     சில நேரங்களில் சிறுமியின் அலறல் வெளியே கேட்கும் போது யாராவது கதவைத் தட்டி ஏதாவது விசாரித்தால் ஒன்றும் பதில் சொல்ல மாட்டாராம்.  அந்த சிறுமி சினேகாவிடம் மூன்று வருடங்களாக பணி புரிகிறார்.   அந்த சிறுமியும் யாருடனும் பேசுவது கிடையாது.

திடீரென ஒரு நாள் அந்தச் சிறுமி தனது வீட்டு பால்கனியில் இருந்து பக்கத்து வீட்டு பால்கனிக்கு மெல்ல நகர்ந்து ஏறி அவர்கள் வீட்டுக்குச் சென்று தன்னை சினேகா கொடுமைப் படுத்துவதாகவும், தன்னைக் காப்பாற்ற வேண்டும் எனவும் கண்ணீர் விட்டு கதறி இருக்கிறாள்.   அவர்களும் அடுக்குமாடி அசோசியேஷன் தலைவர் மூலம் போலீசுக்கு புகார் கொடுத்துள்ளனர்.  போலீசார் அந்தச் சிறுமியை மீட்டு சினேகாவை கைது செய்துள்ளனர்.

அந்த சிறுமி போலீசாரிடம்,  “நான் சினேகா அக்காவிடம் மூன்று வருடங்களாக பணி புரிகிறேன்.  அக்கா எனக்கு நிறைய வேலைகளை கொடுப்பார்.  சிறு தவறு செய்தாலோ, அல்லது நான் யாரிடமாவது பேசி விட்டாலோ என்னை அடித்து நொறுக்குவார்.  ஒருமுறை நான் நாயை சரியாக கவனிக்கவில்லை என்பதால் எனது உடைகளை களைந்து கொதிக்கும் நீரை என் மீது வீசினார்.  என்னை பலமுறை இரும்புக் கம்பியால் அடித்துள்ளார்.  நான் சத்தம் போட்டு அழுதால் பாலிதீன் பையை என் முகத்தில் கட்டி விடுவார்.  நான் மூச்சுத் திணறல் ஏற்பட்டு தவிப்பேன்.

தினமும் கல்லூரிக்கு போகும் முன் எனக்கு பல வேலைகளை சொல்லி விட்டு செல்வார்.  வீடு முழுவதும் அக்கா கண்காணிப்பு காமிரா வைத்துள்ளார்.  மாலையில் வந்து நான் அனைத்து வேலைகளையும் சரியாக முடித்து விட்டேனா என்பதை அந்த காமிரா பதிவில் இருந்து பார்த்துக் கொள்வார்.  நான் முழுமையாக பணிகளை முடித்தால் மட்டுமே உணவு அளிப்பார். ” என கண்ணீருடன் தெரிவித்தார்.

அந்தச் சிறுமியின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் சிறுமி ஒப்படைக்கப் பட்டார். அந்த சிறுமிக்கு மனோதத்துவ அறிவுரை தேவைப்படுவதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.   அனேகமாக கொத்தடிமை முறையில் அந்த சிறுமி பணி புரிகிறாரா என்பது பற்றி விசாரணை நடை பெற்று வருகிறது.   உடலெங்கும் இன்னும் பல காயங்கள் ஆறாமல் உள்ளதால் அந்த சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் ஜாமீன் கோரி மனு செய்த சினேகாவின் மனு போலீசாரின் தலையீட்டால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.