இன்றும் தொடரும் தேவதாசி முறை : ஆந்திராவில் நடைபெறும் அவலம்!

சித்தூர்

ல தலைமுறைகளுக்கு முன்பே ஒழித்து விட்டதாக கூறப்படும் தேவதாசி முறை ஆந்திராவில் இன்னும் தொடர்கிறது.

ஆந்திரப் பிரதேச சித்தூர் மாவட்டத்தில் மாதம்மா என்னும் தெய்வத்துக்கு பெண்களை தேவ தாசிகளாக அர்ப்பணிக்கும் வழக்கம் இன்னும் தொடர்கின்றது.  இந்தக் கொடுமை தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலும் தொடர்கின்றது.    அதன் பிறகு அந்தப் பெண்களும் மாதம்மா என அழைக்கப்படுகின்றனர்.  சித்தூர் மாவட்டத்தில் 22 மண்டலங்களில் இந்த முறை உள்ளது.

கிழக்கு ஆந்திரப் பிரதேச பகுதிகளான புத்தூர், நகரி, நாகலாபுரம், பிச்சாட்டூர், கேவிபி புரம், ஸ்ரீகாளஹஸ்தி ஏற்படு, தொட்டாம்பேடு, பி என் கண்டிகை, நாராயணவனம் ஆகிய இடங்களிலும், மேற்குப் பகுதியில் பாலமனேர், பைரெட்டிபள்ளி, தாவனம்பள்ளி ஆகிய இடங்களில் இன்றும் இம்முறை தொடர்கின்றன.   ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வேறு சில பகுதிகளிலும் இந்த முறை உள்ளது.

மாதம்மா ஆக தேர்ந்தெடுக்கப்படும் பெண் மணப்பெண் போல அலங்காரம் செய்யப்பட்டு  கோயிலில் அனுப்பப்படுகிறார்கள்.   பின்பு கடவுளின் கையில் கொடுத்து வாங்கப்பட்ட தாலிப் பொட்டை ஐந்து ஆண்கள் சேர்ந்து அந்தப் பெண்ணின் கழுத்தில் கட்டுகிறார்கள்.   அதன் பின் அந்த ஐவரும் சேர்ந்து அவளுடைய உடைகளைக் களைந்து நிர்வாணமாக்கி சன்னதிக்குள் அனுப்புகின்றனர்.   அன்று இரவு சன்னதியில் அந்தப் பெண் இரவைக் கழிக்க வேண்டும்.   அதன் பின் அந்தப் பெண் பொதுச் சொத்தாக கருதப்படுகிறாள்.   பலரும் அவளுடன் பாலியல் உறவு கொள்கின்றனர்.  அதில் கிடைக்கும் பணத்தை வைத்து அவள் வாழ்க்கை நடத்த வேண்டும்.

கேவிபி புரத்தில் வாழும் 40 வயாதான ஒரு மாதம்மா இந்த பாலியல் தொழிலை விட்டு விட்டு ஸ்ரீகாளஹஸ்தியில் வீட்டு வேலை செய்து பிழைக்க ஆரம்பித்துள்ளார்.  ஆனால் அவரை அந்த ஊர் இளைஞர்கள் அப்படி பிழைக்க விடாமல் மீண்டும் அவரை மாதம்மா ஆக்கி உள்ளனர்.   அவரை கண்டு பரிதாபம் அடைந்து தன்னுடன் வாழ அழைத்த ஒருவருடனும் அவரை வாழக்கூடாது என தடுத்து மீண்டும் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்துள்ளனர்.

இது குறித்து பல சமூக ஆர்வலர்களும், தன்னார்வு தொண்டு நிறுவனங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த பல்லாண்டுகளாக முயன்று வருகின்றனர்.   ஆனால் சமீபத்தில் தன் மகளுக்கு இதய நோய் சரியானால் அவளை மாதம்மா ஆக்குவதாக வேண்டிக் கொண்டிருந்த ஒரு விவசாயி அதை செய்துள்ளார்.     அவரிடம் பேசிய போது, “இது எங்களின் உணர்வு பூர்வமான வேண்டுதல்.  என் மகளை நான் மீண்டும் அழைத்துக் கொண்டால் அவளுக்கு மீண்டும் இதய நோய் வந்துவிடும்.   எங்காவது எப்படியாவது என் மகள் உயிருடன் இருந்தால் போதுமானது” என தெரிவித்துள்ளார்.

”இந்த மாதம்மாக்களுக்கு புனர் வாழ்வு தர பல திட்டங்களை மாநில அரசுகள் தீட்டி வருகின்றன.   அயினும்  அவர்களுக்கு உள்ள மூட நம்பிக்கையால் இந்த பழக்கத்தில் இருந்து மீண்டு வர மாதம்மாக்கள் ஒப்புக் கொள்வதில்லை.   முன்பு கூறியதைப் போல் வெளி வரும் மாதம்மாக்களையும் ஒரு சிலர் ஒழுங்காக வாழ விடுவதில்லை.   இந்த அவலத்துக்கு ஒரு முடிவே இல்லாமல் நடந்துக் கொண்டு வருகிறது.” என பெயர் தெரிவிக்க விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
English Summary
Still Devadasi system is continuing in AP