இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த 21 சமூகநீதிப் போராளிகளின் தியாகத்தைப் போற்றும் வகையில் விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டியில் அமைக்கப்பட்டுள்ள மணி மண்டபத்தினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளார்.

வன்னியர் இட ஒதுக்கீடு போராளிகள் 21 பேருக்கு விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

சமூக நீதிக்கான போராட்டத்துக்கான தொடர்ச்சியான வரிசையில் 1987-ம் ஆண்டு நடைபெற்ற 20% தனி இட ஒதுக்கீடு கோரி வட தமிழகத்தில் நடந்த போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் போராட்டத்தில் அன்றைய அரசின் காவல்துறை துப்பாக்கிச் சூட்டுக்கு 21 பேர் பலியானவர்கள்.

அவர்களின் உயிர் தியாகத்துக்கும் போராட்டத்துக்கும் நியாயம் வழங்கிடும் வகையில், 1989-ம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, இந்தியாவிலேயே முதன்முறையாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை அமைத்துக் கொடுத்து அவர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டை வழங்கி கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சம அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்த நிலையில் 21 சமூகநீதிப் போராளிகளின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவர்களுக்கு மணிமண்டபத்தையும் மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி அவர்களின் திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவரங்கத்தினையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டியில் நாளை (28.01.2025) காலை 10.00 மணிக்கு திறந்து வைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.