ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தங்கள் குடும்ப திருமண நிகழ்வுக்கு 50 நபர்களுக்கு மேல் அழைப்பு விடுத்த காரணத்திற்காக, சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.6 லட்சத்திற்கும் மேலாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; பில்வாரா மாவட்டத்தில் வசிக்கும் கிசுலால் ரதி என்பவர், தனது மகனின் திருமண ஏற்பாடுகளை செய்திருந்தார். தற்போது அம்மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆனால், இந்த ஊரடங்கு விதிகளை மதிக்காமல், கிசுலால், 50க்கும் மேற்பட்ட விருந்தினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தத் திருமண நிகழ்வுக்குப் பின்னர், அதில் கலந்துகொண்டவர்கள் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. ஒருவர் மரணமடைந்தார்.

இதனையடுத்து, கிசுலால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கொரோனா தனிமைப்படுத்தல் வசதிகளை மேற்கொள்ளும் வகையில், அவருக்கு ரூ.626600 அபராதம் விதித்தது மாநில அரசு. அத்தொகையை, முதல்வர் நிவாரண நிதியில் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.