அ.தி.மு.க.வின் வளர்ச்சி ஒவ்வொன்றிலும் எங்கள் பங்கு இருக்கிறது.! : சசிகலா உறவினர்  திவாகரன் முழக்கம்

Must read

திவாகரன்

வருடம்தோறும் பொங்கல் பண்டிகையையொட்டி,  அ.தி.மு.க. பொதுச்செயலாளர்  சசிகலாவின் கணவர் நடராஜன்,  தமிழர் கலை இலக்கிய திருவிழா என்ற பெயரில் தஞ்சாவூரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்துவார்.  அரசியல் ரீதியாக ஏதாவது பரபரப்பாக பேசுவார்.

தற்போது சசிகலா அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், இந்த திருவிழா மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வழக்கத்துக்கு மாறாக, இந்த முறை நடராஜனுக்கு பதிலாக, சசிகலாவின் உறவினர் திவாகரன் ஆவேசமாகபேசினார்.

‘செம்மன செம்மல்’  என்றும் ‘அரசியல்  சதுரங்கத்தின் கிங் மேக்கர்’ என்றும் நடராஜனை வாழ்த்தி ஃபிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன.  இதுவரை இல்லாத வகையில் சசிகலாவின் படமும் ஃபிளக்ஸில் இடம்பெற்றிருந்தது.

வழக்கமாக போஸ்டர்களில் மட்டும் இடம்பெறும், (சசிகலா உறவினர்) திவாகரன், இந்த முறை விழாவில் பங்கெடுத்து பேசினார்.

.அவர் பேசியதாவது:

“பெரியதொரு நெருடலுடன்தான் இந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. நம்முடைய தங்கத்தாரகை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நம்மைவிட்டு சென்றுவிட்டார்கள், அரசியல் களம் கொந்தளித்துக்கொண்டிருக்கிறது.  ஜனவரியில் அரசாங்கம் மாறிவிடும், கேபினெட் அமைத்துவிட்டார்கள்  என்றெல்லாம் சிலர் பேசினார்கள்.  அதையெல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு அம்மாவின் அரசாங்கம் தொடர்ந்து  சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இங்கே வந்திருக்கும் நீங்களெல்லாம் பங்களித்தவர்கள், பங்களிப்பவர்கள், பங்களிக்கப் போகிறவர்கள்,

அ.தி.மு.க.வின் வரலாற்றில்  தஞ்சைக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. புரட்சித்தலைவர் இந்த கட்சியை துவங்கும்போது, இந்தபகுதியில் பெரும் பங்காற்றியவர் அண்ணன் எஸ்.டி.எஸ். அவர்கள்.  அதையும் யாரும் மறைக்கவோ  மறக்கவோ  முடியாது,

ஆம்.. அந்த நன்றியை யாரும் மறக்கக்கூடாது. எந்த நேரத்தில் யார் உதவி செய்திருந்தாலும் அதை மறக்கக் கூடாது. மறந்தால் அது உண்மையான தமிழனுக்கு அழகல்ல.

அப்போது திண்டுக்கல் தேர்தலை ஒரத்தாடு, மன்னார்குடி தொண்டர்களை வைத்துதான் நடத்தினார் எஸ்.டி.எஸ். ஆகையால், நாங்கள் ஒன்றும் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் அல்ல.

அ.தி.மு.க.வின் வளர்ச்சி ஒவ்வொன்றிலும் எங்கள் பங்கு இருக்கிறது. இது திராவிடர் கட்சி, ஆரியர்கள் கட்சி அல்ல.

இப்போதும் எத்தனையோ திகள் நடந்துகொண்டிருக்கின்றன. கட்சியை எப்படியும் உடைத்துவிடலாம், ஏதாவது செய்து ஆட்சியைக் கவிழ்த்து விடலாம் என பல சதிகள் நடந்து கொண்டு இருக்கிறன்றன. . அப்படி எது நடந்தாலும் எங்கள் சடலத்தின் மீதுதான் நடக்கும்.

2011ம் ஆண்டிலேயே மிகப்பெரிய சதி நடந்தது. அம்மா (ஜெயலலிதா)வைவிட்டு எங்களையெல்லாம் பிரித்தால் போதுமென்று  நினைத்தார்கள் அது நடக்கவில்லை. நடக்கவும் நடக்காது.

ஏனென்றால் நாங்Kள் எது செய்தாலும் திறந்த மனநிலையில்தான் செய்துவருகிறோம். புரட்சித்தலைவருக்கு பிறகு அ.தி.மு.க.வை கட்டிக்காத்ததில் மிகப்பெரிய பங்கு நமக்கு உண்டு, அதுவும் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தினருக்கு உண்டு. அதில் மிகப்பெரிய பங்கு முனைவர் ம. நடராஜன் அவர்களுக்கு  உண்டு.

நடராஜன் – திவாகரன்

அதை எல்லோரும் மறந்திடலாம். நான் மறக்கமாட்டேன். ஏனென்றால், நானும் அவரும் இணைந்து செயல்பட்டிருக்கிறோம். எங்களைக் கொன்றுவிடுவோம் என்றெல்லாம் மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. அதையெல்லாம் துச்சமென மதித்து கட்சியை கைப்பற்றினோம். அப்போது இரட்டை இலை முடக்கப்பட்டது. இரட்டை இலையை மீட்டெடுத்த பெருமை முனைவர் நடராஜனுக்கு உண்டு.

தற்போதைய இளைஞர்களுக்கு இந்த வரலாறு தெரியாது. இந்திய அளவில் முடங்கிய சின்னம் மீண்டும் வந்ததாக சரித்திரமே கிடையாது.  அப்போது முனைவர் நடராஜன் உழைத்து உழைப்பு எனக்கு தெரியும். ஜா அணி,  ஜெ அணி ரெண்டையும் ஒன்றாக இணைத்து, இரட்டை இலை சின்னத்தை வாங்கினார். அதன்பிறகு நடைபெற்ற மதுரை, மருங்காபுரி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றோம்.

அதற்கு தளபதியாக செயல்பட்டவர் முனைவர் நடராஜன்.

எந்தவிதமான எதிர்ப்புகளை பார்க்காமல் தலைவர் வளர்த்த கழகம், அம்மா ஆசைப்படி கழகத்தை நூற்றாண்டுகளுக்கு மேல் வழிநடத்த வேண்டும். நமக்கு கடுமையான காலகட்டம் இது,

அ.தி.மு.க.வுக்கும் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும், எங்களை போன்றவர்களுக்கு நிறைய மிரட்டல் இருக்கிறது. நாம்தான் எப்போதும்போல, அ.தி.மு.க.வை  ஆரம்பித்தில் இருந்தே காத்து வருகிறோம். அதே  போல இப்போதும் காக்க வேண்டும், ஒன்றாக இருந்து ஒரு நல்ல தமிழ் சமுதாயத்தை உருவாக்க வேண்டும்”என்று திவாகரன் பேசினார்.

“சசிகலாவும், அவரது “மன்னார்குடி” உறவினர்களும் அதிமுகவை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்று ஒரு கருத்து தொண்டர்கள் மத்தியில் இருக்கும் நிலையில் “அதிமுகவின் வளர்ச்சியில் எங்கள் பங்கு இருக்கிறது” என்று திவாகரன் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அதிமுக பொதுச்செயலாளர் ஆகிவிட்ட சசிகலா, அடுத்து முதல்வர் பதவியை பெறவார் என்பதை இந்தப் பேச்சு உறுதி செய்கிறது”என்ற கருத்து அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article