டில்லி

டந்த ஐந்து நாட்களாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த நிவாரண உதவி குறித்த விளக்கவுரை பற்றிய ஒரு தொகுப்பு இதோ

பிரதமர் மோடி கடந்த 12 ஆம் தேதி மக்களுக்கு ரூ.20 லட்சம் கோடி மதிப்புள்ள நிவாரண திட்டங்கள் வழங்கப்படும் என அறிவித்தார். ஆத்மநிர்பர் பாரத் அபியான் என்னும் இந்த திட்டத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து ஐந்து பகுதிகளாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.  இன்று இறுதி மற்றும் ஐந்தாம் பகுதியை அவர் அறிவித்தார்.   இந்த ஐந்து நாட்களில் அவர் அளித்த திட்டங்களின் தொகுப்பை இங்கு காண்போம்.

இந்த தொகுப்பில் கடந்த பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ரிசர்வ் வங்கி அறிவித்த பொருளாதார திட்டங்கள் மற்றும் மார்ச் 27 ஆம் தேதி மத்திய அரசு அறிவித்த ரூ.1.7 லட்சம் கோடிக்கான நிவாரண திட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

முதல் பகுதி

முதல் நாளான புதன்கிழமை அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த திட்டத்தில் குறு,, சிறு மற்றும் நடுத்தர தொழில் திட்டங்களுக்குப் பொருளாதார நிவாரணம் அளிப்பது குறித்து அறிவித்தார்,.  தொழில் வளர்ச்சியின் இதயம் போன்ற இந்த பிரிவுக்கு அளிக்கப்படும் உதவியால் புலம்பெயர் தொழிலாளர் உள்ளிட்ட 11 கோடி பேர் பயன் பெறுவார்கள் என அவர் தெரிவித்தார்.

முதல் பகுதியில் அறிவிக்கப்பட்ட 16 முக்கிய அறிவிப்புக்களில் நடுத்தர, சிறு மற்றும் குறுந் தொழில் நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட், மின் விநியோகம் மற்றும் ஊதியம் பெறும் மக்கள் ஆகியோருக்கு பல நலத்திட்ட உதவிகளை அறிவித்தார்.    இந்த  திட்டங்களின் மூலம் தொழிலதிபர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் அதிக பணப்புழக்கம் உண்டாகும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

முதல் பகுதியின்  மொத்த மதிப்பு ரூ.5,94,550 கோடியாகும்.

இரண்டாம் பகுதி

இரண்டாம் நாளான வியாழன் அன்று நிதி அமைச்சர்  இந்தியாவின் சுயச் சார்பு திடங்களின் கீழ் அளிக்கப்படும் நிவாரண திட்டங்கள் குறித்து அறிவித்தார்.  அப்போது அவர் புலம்பெயர் தொழிலாளர்கள் நலனுக்கு எடுக்கப்படும் மூன்று நடவடிக்கைகள் குறித்த விவஙகளை வெளியிட்டார்.

புலம் பெயர் தொழிலாளர்கள் தேசிய உணவு பாதுகாப்பு விதி மற்றும் மாநில அரசுகளின் ரேஷன் கார்டு திட்டங்களின்கீழ் வருவதில்லை என்பதால் அவர்களுக்கு ஒரு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை மற்றும் 1 கிலோ பருப்பு போன்றவை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார்.

அத்துடன் ஒரே நாடு ஒரே ரேஷன் என்னும் திட்டத்தின் கீழ் நாட்டில் எங்கு இருந்தாலும் புலம்பெயர் தொழிலாளர்கள் பொது விநியோக திடத்தின் கீழ் பொருட்களை வரும் 2021 ஆம் வருடம் மார்ச் மாதத்துக்குள் பெற முடியும் என தெரிவித்துள்ளார்.  இதுவும் பிரதமரின் முந்தைய  திட்டங்களில் ஒன்றாகும்.

இரண்டாம் பகுதியின் மொத்த மதிப்பு ரூ.3.10.000 கோடி ஆகும்.

மூன்றாம் பகுதி

மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை அன்று நிதி அமைச்சர் மூன்றாம் பகுதியாக விவசாயத் துறைக்கான 11 திட்டஙக்ளை அறிவித்தார்.   இந்த நடவடிக்கைகளில் பெரும்பாலானவை ஏற்கனவே அரசு நடைமுறை படுத்தியுள்ள அல்லது நடைமுறைப்  படுத்த போவதாக தெரிவித்த திட்டங்கள் ஆகும்.

இந்த 11 திட்டங்களில் மூன்று திட்டங்கள் நிர்வாக சீர்திருத்தம் குறித்தவை ஆகும்.  இவற்றில் அத்தியாவசிய பொருட்கள் விதி மாற்றம், மற்றும் மத்திய சட்டத்தின் விவசாய சந்தையைக் கொண்டு வருவது போன்றவை அடங்கும்.   இவை அனைத்தும் ஏற்கனவே மோடி அரசால் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் பகுதியாகும்.

மேலும் நிதி அமைச்சர் ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் விவசாய உள்கட்டமைப்பு நிதி குறித்து அறிவித்தார்.  அதில் குறு உணவு உற்பத்தி தொழிலுக்கு ரூ. 10000 கோடி, கால்நடைகளின் நோய்களுக்கான தடுப்பூசி, தக்காளி உருளை, வெங்காயம் வரிசையில் அனைத்து உணவுப்பொருட்களுக்கும் போக்குவரத்து மானியம், மீன் உற்பத்திக்கான உதவி, ரூ. 15000 கோடிக்கான கால்நடை பராமரிப்பு, ரூ.4000 கோடி மூலிகை விவசாயம், மற்றும் தேனி வளர்ப்புக்கு ரூ.500 கோடி ஆகியவை அடங்கும்.

மூன்றாம் பகுதியின் மொத்த மதிப்பு ரூ.1,50,000 கோடி ஆகும்.

நான்காம் பகுதி

நான்காம் நாளான நேற்று நிதி அமைச்சர் அறிவித்ததில் முந்தைய பொருளாதார சீர்திருத்தம் மற்றும் முந்தைய முடிவுகளின் புதிய வடிவங்கள் அதிகம் இருந்தன.   இவற்றில் வர்த்தக நிலக்கரி சுரங்கம், நிலக்கரி வாயு திட்டங்கள், விமான பழுது பார்த்தல், பராமரிப்புக்கான  தொழிலகம் தொடங்கல், விமான நிலைய தனியார் மயம், இந்திய விண்வெளி பயன்பாடு ஆகியவை அடங்கும்.

வர்த்தக நிலக்கரி சுரங்க திட்டம் இரண்டு வருடப் பழையதாகும்.   இந்த திட்டம் 2018 ஆம் வருடம் ஒப்புதல் பெறப்பட்டதாகும்.   இது குறித்து அதே வருடம் டிசம்பர் மாதம் 15 நிலக்கரி வளமுள்ள இடங்களும் கண்டறியப்பட்டதாகவும் அரசு அறிவித்திருந்தது.

ஐந்தாம் பகுதி

இன்று ஐந்து மற்றும் இறுதிப் பகுதியை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்   இன்று நிதி அமைச்சர் வழக்கம் போலப் பிரதமர் மோடியை இந்த திட்டங்களுக்காகப் புகழ்வதுடன் தொடங்கினார்.  இன்று அவர் மாநிலங்களுக்கான நிதி உதவிகள், கடன் வரம்பு நீட்டிப்பு ஆகியவை குறித்து அறிவித்தார்.  மேலும் கல்வித் துறையில் நடைபெற உள்ள மாற்றங்கள், திவால் சட்ட சீரமைப்பு குறித்தும் அறிவித்தார்.

நான்கு மற்றும் ஐந்தாம் பகுதிகளின் மொத்த மதிப்பு : ரூ. 48100 கோடி

பிரதமர் வறுமை ஒழிப்பு நிவாரண திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட உதவிகள் ரூ.1,92, 800 கோடி

ரிசர்வ் வங்கி அளித்துள்ள நிவாரண திட்டங்கள் மதிப்பு ரூ. 8.01,603 கோடி

 ஆக மொத்தம் ரூ.20,97,053 கோடிகள் என நிதி அமைச்சர் கணக்கு அளித்துள்ளார்.