அரசியல் சாசனம் பிரிவு 356… பாமரன் புரிதல்….

Must read

 நெட்டிசன்:

சந்திரபாரதி (Chandra Barathi) அவர்களின் முகநூல் பதிவு:

இந்திய அரசியல் சாசனம் பிரிவு 356, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து அரசியல் சாசனப்படி சட்டத்தின் ஆட்சி நடை பெற இயலாத நிலையில், பெரும்பான்மை இல்லாததால் எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் மாநில அரசுகளை கலைத்து விட்டு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வழிவகை செய்கிறது. ஆளுநரின் அறிக்கையின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும். பாராளுமன்றத்தின் ஒப்புதலும் தேவை.

குடியரசு தலைவர் ஆட்சி கீழ்வரும் சூழல்களில் அமல்படுத்த அரசியல் சாசனம் வழி வகை செய்துள்ளது:

1. மாநில சட்டசபையில் எவருக்கும் பெரும்பான்மையில்லாத நிலையில், முதல் அமைச்சரை தேர்ந்தெடுத்து ஆட்சியமைக்க முடியாத நிலையில்
2. கூட்டணிகள் முறிவினால் பெரும்பான்மை இழப்பதனால்
3. உடனடியாக சரி செய்ய இயலாத சட்ட ஒழுங்கு சீர்கேட்டினால்
4. தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித்து நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படக் கூடிய சூழலில்
5. பொதுத் தேர்தல் தவிர்க்க இயலாக் காரணங்களால் நடத்த இயலாமல் தள்ளிப் போகும் போது

இந்தியாவில் முதல் முறையாக குடியரசு ஆட்சி 1959 ஆம் ஆண்டு கேரளாவில் தான் அமல்படுத்தப்பட்டது. அப்போது பிரதமராக இருந்தவர் பண்டித ஜவஹர்லால் நேரு, மாநில முதல்வர் E.M.S. நம்பூதிரிபாட். அதற்குப் பிறகு இந்தியாவில் 125 தடவை மாநிலங்களில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 10 முறை மணிப்பூர் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஐந்து (5) முறை அமல் படுத்தப்பட்டுள்ளது. ஐந்து முறையும் மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது திராவிடக்கட்சிகள், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் சாசனப் பிரிவு 356 முறைகேடாக பயன்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் 1983 ஆம் ஆண்டு மத்திய மாநில அரசுகளின் உறவுகள், அதிகாரப் பகிர்மானம் குறித்து ஆய்வு நடத்தி சிபாரிசு செய்ய நீதியரசர் சர்க்காரியா தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. ஆணையம் தனது அறிக்கையில் அரசியல் சாசனப் பிரிவு 356 இன் பயன்பாடு அதிகரித்துள்ளதை கவலையுடன் சுட்டிக் காட்டியது. சர்க்காரியா ஆணையத்தின் பரிந்துரைகள் இன்ரு வரை முழுமையாக அமல்படுத்தபப்டவில்லை என்பது குரிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் மட்டுமல்ல, பாஜக அரசும் அரசியல் சாசனப் பிரிவு 356 ஐ பயன்படுத்துவதில் சளைத்தவர்களல்ல. சமீபத்தில் அருணாசல பிரதேச அரசை கலைத்து விட்டு, குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது. நீதிமன்ற தலையீட்டினால் குடியரசு தலைவர் ஆட்சி இந்த மாநிலத்தில் ரத்து செய்யப்பட்டது. அரசியல் காரணமாக அங்கு பின்னாள் ஆட்சி மாறியது வேறு விடயம்.

அரசியல் சாசனப் பிரிவு மத்திய ஆட்சியாளர்களால் எதிர்க் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் மீது தவறாகப் பிரயோகிக்கப்படுகிரது என்பது பொதுவாக எழும் குற்றச்சாட்டு. மக்களைச் சந்தித்து பெரும்பான்மை பெற முடியாத நிலையில் புறவாசல் வழியே ஆட்சியைக் கைப்பற்ற ஆட்சியாளர்கள் கையிலெடுக்கும் ஆயுதமாகவே 356 ஆவது பிரிவு பயன்பட்டு வந்துள்ளதாக விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. அரசியல் சாசனப்பிரிவு 356 மத்திய – மாநில அரசுகளின் உறவுகளில் நெருடலை ஏற்படுத்தும் முள்ளாகவே உள்ளது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

பெரிதான சட்ட ஒழுங்குப் பிரச்சனையோ, சட்ட மன்ரத்தில் பெரும்பான்மையில் குறைபாடோ, தமிழகத்தில் தீவிரவாதிகளால் பொது அமைதிக்கோ, நாட்டின் எல்லைகளுக்கோ அச்சுறுத்தல் இல்லாத நிலையில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்த வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. மொத்தமாக அமைச்சரவை மீது ஊழல் குற்றச்சாட்டு சாட்டப்பட்டு கைது மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த முடியுமா என்பது பரிசீலிக்கக் கூடியது.

என்னமோ போடா மாதவா… புறவாசல் வழியா அதிகாரத்திற்கு வந்தாலும் மக்கள் மனதில் இடம் பிடிக்க மிக அதிக காலமாகுமே…..

More articles

Latest article