சென்னை : முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவுத் திட்டமான சேது சமுத்திர திட்டத்தை, நாட்டின் பாதுகாப்பு கருதி, உடனடியாக பிரதமர் மோடி நிறைவேற்ற வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: 2005ம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்த திட்டம் சேது சமுத்திர திட்டம்.
இந்த திட்டம் 12 ஆண்டுகளாக முடங்கி இருக்கிறது. ராணுவ ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சேது சமுத்திர கால்வாயை நிறைவேற்றுவது பாதுகாப்புக்கு அவசியம். இலங்கையில் 700 கோடி டாலருக்கு மேல் முதலீடு செய்துள்ள சீனா துறைமுகத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
தென் சீனக் கடலிலும், தனது கடற்படை ஆதிக்கத்தை விரிவுப்படுத்த தொடர்ந்து சீனா முயற்சிக்கிறது. தற்போதுள்ள நிலைமையில் தமிழகக் கடல் பகுதியில் உள்ள சேதுக் கால்வாய்த் திட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. பேரறிஞர் அண்ணா, காமராஜ், கலைஞர், வாஜ்பாய் ஆகிய தலைவர்கள் ஆதரித்த திட்டம் சேது கால்வாய் திட்டம்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போதே சேது கால்வாய் திட்டத்தின் சாத்தியக் கூறு ஆய்வு நடத்தப்பட்டது. தங்கள் ஆட்சிக் காலத்திலேயே சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
நாட்டின் பாதுகாப்பு கருதி, தமிழர்களின் 150 ஆண்டு கால சேது சமுத்திர திட்டத்தை 2024ம் ஆண்டு தமிழர் திருநாளுக்கு முன்னதாகவே நிறைவேற்றி, தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிரதமர் மோடி பெற வேண்டும் என திமுக சார்பில் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று கூறி உள்ளார்.