கொரேனா வைரஸ் தொற்று இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளை மிரட்டி வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் இந்தியா உள்பட உலக நாடுகள், பொது முடக்கத்தை அறிவித்து வருகின்றன. இதனால் உலக பொருளாதாரம் சீர் குலைந்துபோய் உள்ளது.
இந்தியாவிலும் கடந்த மார்ச் 24ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், தினக்ககூலிகள் முதல் தொழில் முதலைகள் வரை அனைத்தும் தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, மதுரை மேலமடை பகுதியைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன், தனது மகளின் மேற்படிப்புக்காக சேர்த்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி மகிழ்ந்தார். சுமார் 615 குடும்பத்தினருக்கு அவர்கள் உதவியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான தகவல் பிரதமர் மோடிக்கு தெரியப்படுத்தப்பட்டது. அவரும் கடந்த வாரம் வானொலி உரையான மான்கிபாத் நிகழ்ச்சியில் மோகனையும், அவரது குடும்பத்தினரையும் பாராட்டினார்.
இந்த நிலையில் ஐ.நா.நல்லெண்ண தூதராக மதுரை சலூன்கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வாகியுள்ளார். நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தில் பேசவும் நேத்ராவுக்கு ஐ.நா.அழைப்பு விடுத்துள்ளது. இந்த தகவலை மோகன் தெரிவித்து உள்ளர்.
ஐ.நா.வின் (வளர்ச்சி மற்றும் அமைதிக்கான) அவை சார்பாக ஏழை மக்களின் நல்லெண்ண தூதராக அறிவிப்பட்டுள்ள நேத்ராவுக்கு ரூபாய் 1 லட்சம் ஊக்கத்தொகையும் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மாநாட்டில் வறுமை தொடர்பாக பேசவும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.