சென்னை

தான் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்துக்குச் செல்லக் கூடாது என யாருக்கோ உள்நோக்கம்  உள்ளதாக  ஜெ தீபா கூறி உள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லமான வேதா நிலையத்தை நினைவில்லமாக்க அரசு முடிவு செய்தது.   இல்லத்தை அரசுடைமை ஆக்குவதாகத் தமிழக அரசு  அவசரச் சட்டம் இயற்றியது.  இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் 2 ஆம் நிலை வாரிசுகள் எனச் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

இன்று சென்னை உயர்நீதிமன்றம் ஜெயலலிதா திருமணம் ஆகாதவர் என்பதால் அண்ணன் மகள் மற்றும் மகன் ஆகியோர் நேரடி வாரிசு என தீர்ப்பில் திருத்தம் செய்தது.   சென்னை உயர்நீதிமன்றம் திருத்தம் செய்ததை அடுத்து இன்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

தீபா, “இன்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.  அந்த உத்தரவு எங்களிடம் வராமல் நான் வேதா இல்லத்துக்குள் செல்ல மாட்டேன்.  ஆனால் தமிழக அரசு எங்கள் மீது வீண் பழி சுமத்துகிறது.  நான் வேதா இல்லத்துக்கு வரக்கூடாது என்பதில் யாருக்கோ உள்நோக்கம் உள்ளது.  அனைவருக்கும் போயஸ் தோட்ட சாலை பொதுவானது

உயர்நீதிமன்றம் எங்களுக்கு முழு அதிகாரம் வழங்கியதற்கு நான் மனதார வரவேற்பு தெரிவிக்கிறேன்.  அதிமுகவினர் நீதிமன்ற தீர்ப்பை வணங்கி ஏற்றுக் கொள்ள வேண்டும்.  நான் அதிமுகவினருக்கு எதிராக கேள்விகள் கேட்பதால் அவர்கள் என்னைக் குறி வைக்கின்றனர்.  எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.