சென்னை
இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பல அரசியல் தலைவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக ஆளுநர், முதல்வர், திமுக தலைவர் உள்ளிட்ட பலரும் இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் :அனைத்து இஸ்லாமியச் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நாம் அனைவரும் நட்பு, சகோதரத்துவம், பரஸ்பர மரியாதை, இரக்கம், அன்பு மற்றும் தாராளமாக உதவும் மனப்பான்மையை வலுப்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி : புனித ரம்ஜான் பெருநாளில், உலகில் அமைதி நிலவட்டும், அன்பு தழைக்கட்டும், மகிழ்ச்சி பெருகட்டும் என்று வாழ்த்தி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது உளமார்ந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
எதிர்க்கட்சி (திமுக) தலைவர் மு.க.ஸ்டாலின் : திமுகவுக்கும் – இஸ்லாமியச் சமுதாயத்தினருக்குமான நல்லுறவு – அண்ணா, கலைஞர் என நீடித்து நிலைத்து – தற்போதும் அது தொடர்ந்து வருகிறது. ஒப்பற்ற இந்தச் சமுதாயத்தின் வாழ்க்கைத் தரமும் – நல்வாழ்வும் மேலும் உயர்ந்து, சிறப்பாக அமைந்திடவும், சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம் நாளும் தழைத்திடவும், திமுக சார்பில் இஸ்லாமிய மக்கள் ரமலான் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ : சமத்துவம் தழைக்கவும், சகோதரத்துவம் நிலைக்கவும், சமய நல்லிணக்கம் ஓங்கவும், சமூக ஒற்றுமை மேம்படவும் உறுதி கொண்டு, இஸ்லாமியப் பெருமக்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் : ஏழை, எளியவர்கள் மீது பரிவு காட்டி, உண்ண உணவளித்து, உடுக்க உடைகொடுத்து, தானதர்மங்கள் செய்து, முப்பது நாட்கள் புனித நோன்பினை முடித்துக்கொண்டு ரம்ஜான் திருநாளைக் கொண்டாடும் இந்த இனிய நாளில், அன்பு ஓங்கிட, அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட, சகோதரத்துவம் வளர்ந்திட வேண்டுமென இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.
பாமக நிறுவனர் ராமதாஸ் : மற்ற அனைத்து மதங்களையும் போலவே இஸ்லாமும் நன்மைகளை மட்டுமே போதிக்கிறது; அமைதியையும், ஈகையையும் வலியுறுத்துகிறது. இவை தான் உலகில் அமைதியையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தும். இதை உணர்ந்து மக்களிடையே நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகவும், நாட்டில் அமைதி, வளம் ஆகியவை அதிகரித்து மக்கள் மகிழ்ச்சியாக வாழவும் பாடுபட உறுதியேற்றுக் கொள்வோம்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் : இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து, வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டு, விருந்தோம்பல் செய்து, உதவிகள் செய்து, மகிழ்ச்சியோடு ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடி வளமுடன், நலமுடன் வாழ இறைவன் துணை நிற்க த.மா.கா சார்பில் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதைப் போல் மேலும் பல தலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.