சென்னையில் கொரோனா தொற்றால் மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை பொதுமக்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதல் நடத்திய 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இந்தச் சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், மருத்துவர்கள், மருத்துவ சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் தங்களுடைய வேதனையை பகிர்ந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக ‘மனித வைரஸ்’ என்ற பெயரில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார் இயக்குநர் பேரரசு.

அந்தக் கவிதை:

இறந்து
தெய்வமானவர்களை
அடக்கம் செய்ய,
இறக்காத
பிணங்கள்
மறுக்கின்றன!

மனசாட்சியைப்
புதைத்துவிட்டு
மருத்துவரைப்
புதைக்க,
மனித நோய்கள்
தடுக்கின்றன!

இதயத்தில்
தொற்றுநோய் உள்ளவன்
சொல்கிறான்
பிரேதத்தில்
தொற்று நோயென்று!

நன்றிகெட்ட
உன்னைவிட
நோய் பரப்பிய
சீனக்காரன்
சிறந்தவனே!

கோயில்
மூடப்பட்டுவிட்டது!
தெய்வங்கள்
அடைபட்டுவிட்டது!

இன்று
மருத்துவனே
நடமாடும் தெய்வம்!
அந்த தெய்வத்தையும்
கல்லாக்கி விடாதடா
கலிகால மனிதா!

இப்படி
நன்றிகெட்டு
வாழ்வதற்கு
கரோனா வந்து
சாவது மேல்!