விழுப்புரம்: விழுப்புரத்தில் கொரோனா வார்டில் இருந்து டெல்லி இளைஞர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள புதுச்சேரி வந்த டெல்லியை சேர்ந்த இளைஞர் விழுப்புரத்தில் தங்கியிருந்தார். அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், அங்குள்ள அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பபட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.
அவரிடம் இருந்து ரத்த மாதிரி பெறப்பட்டது. ஆனால் கடந்த 7ம் தேதி மருத்துவமனையில் இருந்து அவர் தப்பியோடினார். பின்னர், ஆய்வு முடிவில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் புதுச்சேரி, விழுப்புரத்தில் தீவிரமாக தேடினர். கடைசியில், டெல்லி இளைஞர் செங்கல்பட்டு அருகே உள்ள படாளம் பகுதியில் கைது செய்யப்பட்டார்.
இந் நிலையில், கொரோனா வார்டில் இருந்து அந்த இளைஞர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, விழுப்புரம் மருத்துவமனையில் இருந்து தப்பி, செங்கல்பட்டு வரை டெல்லி இளைஞர் ரயிலில் பயணித்து இருக்கிறார்.
ஆகையால், பலருக்கும் கொரோனா வைரஸ் நோய் பரவல் ஏற்பட்டிருக்கலாம் என்று அச்சம் உருவானது. இதையடுத்து, சுகாதார பணியாளர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கி இருக்கின்றனர்.