சென்னை:

மிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து உள்ளதால், வரும் 14ந்தேதியுடன் முடிவடையும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, தமிழக அமைச்சர்களுடன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை ஆலோசனை செய்ய உள்ளார்.

தலைமைச்செயலகத்தில் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் கடந்த மாதம் 24ந்தேதி முதல் ஏப்ரல் 14ந்தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், ஊரடங்கு முடிவடைய இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், தற்போதுதான் நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளது.

இந்த நிலையில்,  ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, இன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதைத்தொடர்ந்து  இன்றுமாலை 5 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, ஒடிசா, பஞ்சாப், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.