சென்னை:

சென்னையில் கொரோனாதொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இன்று 2 பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது, ஏற்கனவே 8 பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், தற்போது 10 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் நடந்த தபிலிஜி இஸ்லாமிய மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகவதால், சென்னை முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இன்று சென்னையில் மேலும் 2 பேருக்கு  கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து குரோம்பேட்டையில் உள்ள ஹஸ்தினாபுரத்தில் ஒரு சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சென்னை பல்லாவரம் பேரூராட்சிக்குள்பட்ட ஹஸ்தினாபுரத்தில் வடக்கு மசூதி தெருவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.  அது போல் இன்னொருவருக்கும் கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளது. அவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இதையடுத்து மசூதி தெரு உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள தெருக்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இவர்கள் அனைவரும் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள்.

இதையடுத்து,  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 450ஐ தாண்டியது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துவிட்டது.