மதுரை
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு ராணி மங்கம்மாள் உருவாக்கிய மதுரை தமுக்கம் மைதானம் இடிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு ராணி மங்கம்மாள் ஆங்கிலேயருக்கு முன்பு கடைசியாக மதுரையை ஆண்டவர் ஆவார். ராணி மங்கம்மாள் வசித்த அரண்மனை தற்போது காந்தி அருங்காட்சியகமாக உள்ளது. இந்த அரண்மனையைக் கட்டிய போது அருகில் இருந்த யானை மற்றும் குதிரைகளின் வீர விளையாட்டுக்கள் நடைபெறத் தமுக்கம் மைதானத்தை ராணி உருவாக்கினார்.
இந்த வீர விளையாட்டுக்களைத் தனது அரண்மனை மாடத்தில் அமர்ந்து ராணி கண்டு களிப்பது வழக்கமாகும். ஆங்கிலேயர்கள் ராணி மங்கம்மாளை அப்போது மீனாட்சி அம்மன் கோவில் அருகில் இருந்த சிறையில் அடைத்து ஆட்சியை கைப்பற்றினர். ராணியின் அரண்மனை ஆட்சியர் அலுவலகமாக மாற்றப்பட்டது. நாடு விடுதலை அடைந்த பிறகு அந்த அரண்மனை காந்தி அருங்காட்சியகமாக மாறியது.
மதுரை தமுக்கம் மைதானத்தின் மொத்த பரப்பளவு சுமார் 10 ஏக்கர் ஆகும். கடந்த 1981 ஆம் வருடம் மதுரையில் உலக தமிழ் மாநாடு நடந்த போது அங்குக் கலையரங்கம், தோரண நுழைவாயில் ஆகியவை கட்டப்பட்டன. இங்கு பெரிய விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், பொருட்காட்சிகள் உள்ளிட்டவை நடந்து வந்தன. இவ்வாறு மதுரை மக்களின் வாழ்வோடு ஒட்டியதாக தமுக்கம் மைதானம் இருந்து வந்தது.
தற்போது மதுரை ஸ்மார்ட் சிடி திட்டத்தின் கீழ் தமுக்கம் மைதானத்தில் உள்ள கலையரங்கை இடித்துக் கட்டவும் மைதானத்தில் வணிக வளாகம் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. ரூ. 45 கோடியில் தீட்டப்பட்டுள்ள இந்த திட்டத்துக்காக தமுக்கம் மைதானத்தை மூட மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதையொட்டி சித்திரைத் திருவிழா பொருட்காட்சி மாட்டுத் தாவணிக்கு மாற்றப்பட உள்ளது.
இதற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்த போதிலும் மாநகராட்சி மைதானத்தைத் தோண்டுதல் மற்றும் கலையரங்கத்தை இடித்தல் போன்ற பணிகளைத் தொடங்கி உள்ளது. இது குறித்து மதுரை நகரில் எதிர்க்கட்சியினரால் பல சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு பிட் நோட்டிசுகள் வழங்கப்படுகின்றன.
அவற்றில்,
“தமிழக அரசே இது போன்ற காரியத்தை மதுரை மாநகராட்சி நிறுத்தி கொள்ள வேண்டும். மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் உருவாக்கிய வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடத்தை அழித்து ஒழிக்கும் முயற்சியை கை விடுக. தமிழக அரசே வரலாற்றை மாற்றி எழுத ஆசைப்படாதே. பிறகு ஆட்சியாளர்கள், முகவரி இல்லாமல் போய் விடுவார்கள். ஜனநாயகத்தில் பின்னது சாத்தியமே.இடிப்பு நடவடிக்கையை உடனே கைவிடு. வரலாற்று நினைவுச் சின்னத்தைக் காப்பாற்று”
எனக் காணப்படுகின்றன.