சென்னை:
காவல்துறைக்கு வாக்கி டாக்கி உள்பட நவீன இயந்திரங்கள் வாக்குவதற்காக நடைபெற்ற ரூ.350 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாக காவல்துறை அதிகாரிகளின் வீடுகள் உள்பட 100 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
முறைகேட்டில் ஈடுபட்டதாக கருதப்படும் எஸ்.பி மற்றும் டி.எஸ்.பி வீடுகள் மற்றும் வாக்கி டாக்கி சப்ளை செய்த நிறுவனங்கள் உள்பட சென்னையில் மட்டும் 15 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு காவல்துறைக்கு கேமிரா, சி.சி.டி.வி., டிஜிட்டெல் மொபைல் ரேடியோ உள்ளிட்ட தகவல் தொடர்புச் சாதனங்கள் கொள்முதல் செய்யும் ரூ.350 கோடி ரூபாய் டெண்டரில் மெகா ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டது. இதில் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பதாக தமிக உள்துறைச் செயலாளரே குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த முறைகேட்டில், தமிழகக் காவல்துறையில் உள்ள தொழில் நுட்பப் பிரிவின் எஸ்.பி.யாக இருக்கும் அன்புச் செழியன், ரமேஷ் மற்றும் கூடுதல் எஸ்பி , டிஎஸ்பி உள்ளிட்ட பலர் முக்கியப் பங்கு வகித்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தினர்.
முதல்கட்ட விசாரணையில் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. அதையடுத்து, . தமிழக காவல் துறையின் தொழில்நுட்ப பிரிவில் உள்ள முக்கிய அதிகாரி உட்பட ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளுக்கும் முறைகேட்டில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் காவல்துறை யின் டெக்னிக்கல் பிரிவில் பணியாற்றிய எஸ்பி, டிஎஸ்பி உள்பட சென்னையில் 15 பேர் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.