டெல்லி:

“சென்னை துறைமுகம் – மதுரவாயலுக்கிடையே உயர் மேம்பாலம் எப்போது கட்டப்படும்?” என நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா எம்.பி. கேள்விஎழுப்பினார்.

அதற்கு  மத்திய அமைச்சர் பதில் அளித்தார். அதன்படி,  இந்தத் திட்டம் முதலில் 6.1.2009 அன்று கட்டி, செயல்பட்டு ஒப்படைப்பு (பி.ஓ.டி) அடிப்படையில் துவங்கப்பட்டது. இலவச நிலம், கூவம் நதியின் மேல் கட்ட வேண்டி உள்ளதால், எதிர்ப்பில்லாச் சான்றிதழ் தர தமிழக அரசு தர மறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்தத் திட்டம் 8.4.2016 அன்று கைவிடப்பட்டது.

அதன் பின்னர் இந்தத் திட்டம் மறு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கூவம் நதிக்கரைப் பகுதி சீரமைப்பு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மாற்று இடம் தருதல், சுற்றுச் சூழல் ஒப்புதல் உள் ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தமிழக அரசு சரி செய்ய ஒப்புக் கொண்டுள்ளது. அதையடுத்து விரிவான திட்ட அறிக்கை 20.5 கி.மீ. நிலத்திற்கானது தயாரிக்கப் பட்டுள்ளது.

அண்மையில் இந்தத் திட்டத்தை பொறியியல் கொள்முதல் கட்டுமான அடிப்படையில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி டெண்டர்கள் கோரும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் கட்டிட நடவடிக்கைகள், இலவச நிலம் பெறுதல், சிவில் கட்டுமானப் பணிகள் உள்ளிட்டவை முடிந்தவுடன் இந்தத் திட்டத்திற்கான பணிகள் ஒப்படைக்கப்படும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.