குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல வட மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள்,அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டதைத் தொடர்ந்து போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், ரஜினி, “எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது. தேசப் பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார் .

ரஜினி ட்வீட் செய்த சில மணிநேரத்திலேயே நடிகரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், “தலைவர் ஸ்டாலின் தலைமையில் 23-ம்தேதி சென்னையில் நடைபெறும் #CAA2019 எதிர்ப்புப் பேரணியில் அனைவரும் பங்கெடுப்போம். உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு ‘வன்முறை’ என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும்” என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.

இந்தப் பதிவு ரஜினி பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.