சென்னை:
நாடாளுன்ற தேர்தலின்போது தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தனக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கனிமொழி தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.
இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து, பாஜக வேட்பாளரான தமிழிசை மற்றும் தொகுதியின் வாக்காளர் வசந்தகுமார் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் வழக்கு தாக்கல் செய்தார்.
இதற்கிடையில், தமிழிசை, தெலுங்கானா மாநில அளுநராக பதவி ஏற்றதால், அவர் தனது வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்து, அதற்கான கடிதங்களை வழங்கினார். ஆனால், வாக்காளர் வசந்தகுமார் தனது மனுவை வாபஸ் பெற மறுத்து வருகிறார்.
அவரது மனுவில், தூத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழி தனது வேட்புமனுவில் பல தகவல்களை மறைத் திருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். தனது கணவர் அரவிந்தனின் வருமானம் மற்றும் அவருடைய வருமான வரி தொடர்பான விவரங்களை கனிமொழி வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை, தனது கணவர் சிங்கப்பூர் குடிமகனாக இருப்பதைச் சுட்டிக் காட்டி அவரது வருமான வரி தொடர்பான விவரங்கள் தனக்கு பொருந்தாது என கனிமொழி வேட்பு மனுவில் தெரிவித்திருந்ததாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி அது தவறு என்றும், இந்த நிலையில், கனிமொழியின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டது சட்டவிரோதமானது எனவும், எனவே அவருடைய தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் விசாரித்து வருகிறார். கடந்த செப்டம்பர் மாத விசாரணையின் போது, மனு தொடர்பாக இரண்டு வாரத்தில் பதில் அளிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
அதையடுத்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கனிமொழி வெற்றிக்கு எதிராக வழக்கை தொடுத்த வாக்காளர் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், கனிமொழி தரப்பில் நாளை தாக்கல் செய்யப்படுவதாக தெரிவித்ததுடன், இந்த வழக்கை நிராகரிக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதி, கனிமொழியின் மனு மீது நாளை உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்து, விசாரணையை தள்ளி வைத்தார்.