நெல்லை:

முன்னாள் பெண் மேயர் உமாமகேஸ்வரி கொலை வழக்கில் கைதாகி உள்ள மதுரை தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து, சுமார் 25 சவரன் நகைகள் மீட்கப்பட்டு உள்ளது. அதையடுத்து, அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நெல்லை மாநகராட்சி முன்னாள் பெண் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர், பணிப்பெண்  உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மதுரையை சேர்ந்த திமுக பெண் பிரமுகர் சீனி யம்மாளின்  மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு துணையாக இருந்ததாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள கார்த்திகேயன் மற்றும் இருவரிடம்  நடத்தப்பட்ட விசாரணையில்,  உமா மகேஸ்வரி உள்பட 3 பேரையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்ட நிலையில், கொலைக்கு பயன்படுத்தபட்ட ஆயுதங்கள் செங்குளம் அருகே புதுகுளத்தில் கண்டெடுக்கப்பட்டது. மேலும்,  அவரது உடலில் இருந்து பறிக்கப்பட்ட சுமார் 25 சவரன் நகைகளும் கைப்பற்றப்பட்டு உள்ளது.

இதையடுத்து கார்த்திகேயன் உள்பட கைது செய்யப்பட்டுள்ளவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் என்று தெரிகிறது.

திமுகவில் நடைபெற்ற உள்கட்சி மோதல் மற்றும் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாகவே இந்த கொலை நடந்திருப்பது உறுதியாகி உள்ளது.