சென்னை:
கரூர் தொகுதியில் பண பலத்துக்கு எதிராக போராடி வென்றதாக, காங்கிரஸைச் சேர்ந்த ஜோதி மணி கூறியுள்ளார்.
தி நியூஸ் மினிட் என்ற இணையத்துக்கு அவர் அளித்த பேட்டியில், வசதி இல்லாத குடும்பத்திலிருந்து வந்ததால், தேர்தல் பிரச்சாரத்துக்கு என்னால் செலவு செய்ய முடியவில்லை.
வசதி இல்லாத குடும்பத்திலிருந்து வந்தவர்கள் தான் மக்களுக்காக பணியாற்றுவார்கள் என்று கருதி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எனக்கு வாய்ப்பளித்தார்.
திமுக தலைமையிலான பிரச்சாரம் எனக்கு ஊக்கமளித்தது. 4 மாவட்டச் செயலாளர்கள் எனக்காக பணியாற்றினார்கள்.
நயா பைசாகூட சட்டவிரோதமாக சம்பாதிக்க மாட்டேன் என ஏற்கெனவே மக்களுக்கு உறுதி அளித்துள்ளேன்.
தம்பித்துரையை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஒவ்வொரு தொண்டரின் உழைப்பால் சாத்தியமானது.
நான் வெற்றியடைந்தாலும் என் கட்சி நாடு முழுவதும் தோல்வியடைந்தது துரதிஷ்டவசமானது.
கடந்த 5 ஆண்டுகளாக மக்களை மத்திய ஆட்சியாளர்கள் பாடாய் படுத்தினார்கள்.
ஆனால் அவர்களே மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார்கள். மோடி வெறுப்பை பரப்பினார். ராகுல் அன்பை பரப்பினார். மோடி மக்களை பிளவுபடுத்தினார். ராகுல் அனைவரையும் ஒன்றிணைத்தார்.
மோடி பணக்காரர்களுக்கு பணியாற்றினார். ராகுல் ஏழைகளுக்கு பணியாற்றினார். ஒரு சில தோல்விகளால் காங்கிரஸ் துவண்டுவிடாது. இறுதியில் ஒருநாள் வாய்மை வெல்லும்.
இந்த முறை 78 பெண்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காக நாங்கள் போராடுவோம் என்றார்.