புதுடெல்லி:

காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தால், தென்னிந்தியாவில் கட்சியினர் நிலைகுலைந்து போவார்கள் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கண்ணீர் மல்க கூறினார்.


மக்களவை தேர்தல் தோல்விக்குப் பின் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் புதுடெல்லியில் சனிக்கிழமை நடந்தது.

காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யக் கூடாது என கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களும் கேட்டுக் கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யும் முடிவை ராகுல் காந்தி கைவிட வேண்டும்.
அவர் ராஜினாமா செய்தால், தென் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் நிலைகுலைந்து போவார்கள் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

எனினும், ராஜினாமா முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என ராகுல் காந்தி பிடிவாதமாக உள்ளார்.
காரியக் கமிட்டி கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, கட்சியை முழுமையாக சீரமைக்க ராகுல் காந்திக்கு கூட்டத்தில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கிடையே, ராஜினாமா முடிவை கைவிட ராகுலிடம் வலியுறுத்துமாறு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை கட்சித் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.

எனினும், அது ராகுலின் முடிவு என்று சோனியா காந்தி தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.