பொள்ளாச்சி:

கருக்கலைப்பு செய்த பெண் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக, ஆயுர்வேத பெண் டாக்டரை போலீஸார் கைது செய்தனர்.


பொள்ளாச்சியை சேர்ந்தவர் வனிதாமணி. இவர் 5-வது முறையாக கருத்தரிந்தார். கருக்கலைப்பு செய்வதற்காக வனிதாமணியும், கணவர் செல்வராஜும் ஆயுர்வேத டாக்டர் முத்துலட்சுமியை கடந்த ஞாயிற்றுக் கிழமை அணுகினர்.

அவரும், அவரது மகன் டாக்டர் கார்த்திக்கும் க்ளீனிக்கில் வைத்து ஊசி போட்டனர். பின்னர் கருக்கலைப்பு செய்தனர்.

கருக்கலைப்பு செய்யப்பட்ட பெண் வனிதாமணி, மாலை 6 மணியளவில் வீடு திரும்பினார். சிறிது நேரத்தில் உடல் நலம் குன்றியது. உடனே பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே என் வனிதாமணி இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து போலீஸார் கூறும்போது, வடசித்தூரில் ஆயுர்வேத டாக்டர் முத்துலட்சுமி தன் மகனுடன் சேர்ந்து க்ளீனிக் நடத்தி வருகிறார். இவரது மகன் சித்த மருத்துவத்தில் டிப்ளமோ படிப்பு முடித்தவர்.

கருக்கலைப்பு செய்யப்பட்ட பெண் இறந்ததும் டாக்டர் முத்துலட்சுமி தலைமறைவானார். அவரை நாகப்பட்டினம் மாவட்டத்தில் கைது செய்தோம்.
வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற உத்தரவுப்படி அவர் கோயம்புத்தூர் மத்திய பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தாயுடன் சேர்ந்து சிகிச்சை அளித்த மகன் இன்னும் தலைமறைவாக இருக்கிறார் என்றனர்.