தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணி ஒருவர் சிறுத்தைக்குட்டி ஒன்றை கடத்தி வந்தார். இது விமான நிலைய சோதனையின்போது தெரிய வந்தது. சிறுத்தைக்குட்டியை பறிமுதல் செய்த விமான நிலைய அதிகாரிகள், அதை வண்டலூர் மிருக காட்சி சாலைக்கு அனுப்பி வைத்தனர்.
பொதுவாக விமானங்களில் எலக்ட்ரானிக் பொருட்கள், தங்கம் போன்றவை கடத்தி வரப்படுவது வழக்கம். ஆனால், முதன்முறையாக சிறுத்தைக்குட்டியை பயணி ஒருவர் கடத்தி வந்தது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இன்று தாய்லாந்தில் இருந்து சென்னை வரும் விமான பயணி ஒருவரிடம் சிறுத்தைக்கட்டி இருப்பதாக விமான நிலைய அதிகாாிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து, இன்று அதிகாலை சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்தவா்களிடம் விமான நிலைய அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த நபரிடம் சோதனை நடத்தியபோது, அவர் சிறுத்தைக்குட்டி ஒன்றை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த சிறுத்தைக்குட்டியை பறிமுதல் செய்த அதிகாாிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பயணி கொண்டு வந்த சிறுத்தைக்குட்டி பிறந்து 1 மாதம் ஆனது என்றும், தற்போது, அதை வண்டலூர் பூங்கா ஊழியர்கள் பராமரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.