சென்னை
தந்தையின் குடிப்பழக்கத்தால் மனம் உடைந்து தற்கொலை செய்துக் கொண்ட மாணவர் தினேஷின் தந்தை இனி குடிக்கப்போவதில்லை என சபதம் செய்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட்டத்தை சேர்ந்தவர் 18 வயதான தினேஷ் என்னும் மாணவர். இவர் சுமார் 9 வருடங்களுக்கு முன்பு தாயை இழந்த இவர் தனது தந்தை மாடசாமியிடம் மிகவும் அன்பு செலுத்தி வந்தார். படிப்பில் கெட்டிக்காரரான தினேஷ் தனது பத்தாம் வகுப்பில் 463/500 மதிப்பெண் பெற்றுள்ளார். தற்போது நாமக்கல்லில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் தினேஷ் மருத்துவராகும் கனவுடன் நீட் தேர்வு எழுத ஆசைப்பட்டவர்.
மாடசாமியின் குடிப்பழக்கம் தினேஷுக்கு சிறிதும் பிடிக்கவில்லை. பலமுறை சொல்லியும் தந்தை தனது பழக்கத்தை மாற்றிக் கொள்ளாதது தினேஷுக்கு மிகவும் துயரத்தை அளித்தது. தனது வீட்டில் இருந்து சற்றுத் தொலைவில் இருந்த வண்ணாரப்பேட்டை ரெயில்வே பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவர் தனது தந்தை தமக்கு எந்த ஒரு ஈமச்சடங்கும் செய்ய வேண்டாம் எனவும் டாஸ்மாக் கடைகளை மூடாவிட்டால் தான் பேயாக வந்து கடைகளை அடித்து நொறுக்குவேன் எனவும் கடிதம் எழுதி இருந்தார்.
தினக்கூலி வேலை பார்க்கும் மாடசாமியும் தனது மகனின் மரணத்தால் உடைந்து போய் உள்ளார். அவர் தாம் இனி குடிக்க மாட்டேன் என மகனின் உடல் முன்பு சபதம் எடுத்துள்ளார். இந்த மரணம் மதுவுக்கு எதிராக போராடி வரும் பல சமூக ஆர்வலர்கள் மனதை பெரிதும் பாதித்துள்ளது. மக்களில் பலர் தினேஷ் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து மதுக்கடைகளை மூட போராடி வரும் சட்ட மாணவி நந்தினி ஆனந்தன், :இந்த இளைஞரின் மரணத்துக்கு அரசின் மதுக் கொள்கை தான் பொறுப்பாகும். அவர் தந்தை மதுவுக்கு அடிமை ஆகி உள்ளார். அவருக்கு விரைவில் சிகிச்சை அளிக்க வேண்டும். அவருடைய மது அடிமைத்தனத்துக்கு யார் பொறுப்ப்? மதுக்கடைகளை நடத்தும் அரசாங்கம்தானே? தினேஷின் கடிதம் என்னை உலுக்கி விட்டது. அரசு தன் கொள்கையை மாற்றிக் கொள்ளாத போதிலும் இந்தக் கடிதம் குடிப்பவர்கள் மனதை நிச்சயம் மாற்றும் என நம்புகிறேன்” எனக் கூறி உள்ளார்.
அமைச்சர் ஜெயகுமார், “அரசு மதுவுக்கு எதிராகவே உள்ளது. அம்மா (முன்னாள் முதல்வர் ஜெயலலிதா) மதுவிலக்கை படிப்படியாக கொண்டு வருவதற்காகவே 500 டாஸ்மாக் கடைகளை மூடினார். அவர் வழியில் நாங்களும் தீவிர மதுவிலக்கு பிரசாரம் செய்து வருகிறோம். திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டல் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல் குடிப்பழக்கம் உள்ளவர்கள் குடியை நிறுத்தினால் தான் முழு மதுவிலக்கு சாத்தியம் ஆகும்” எனக் கூறி உள்ளார்.
இதற்கு சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் செயலாளர் செந்தில் ஆறுமுகம்,”அரசின் மதுவிலக்கு பிரசாரம் என்பது கள்ளச் சாராயத்துக்கு எதிராக உள்ளது. அந்த பிரசாரத்தை கேட்பவர்கள் கள்ளச்சாராயத்துக்கு பதில் டாஸ்மாக் கடைக்கு சென்று குடிக்க தூண்டும் வகையில் உள்ளது. அனைத்துக் கட்சியினரும் சாராய ஆலைகள் நடத்தி வரும் போது அவர்கள் மதுவுக்கு எதிராக போராடுவது என்பது வெறும்கண் துடைப்பு மட்டுமே” எனக் கூறி உள்ளார்.