பெங்களூரு
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா உடல்நலம் குன்றிய தனது கணவர் நடராஜனை காண சென்னை வர நாளை பரோல் மனு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கணவர் நடராஜனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் கடந்த அக்டோபர் மாதம் சசிகலா பரோலில் வந்திருந்தார். அப்போது நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்று அதன்பின் உடல்நலம் தேறியதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் நேற்று இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் நடராஜன் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் கூறுகின்றன. இந்நிலையில் கணவரைக் காண சென்னை வருவதற்காக சசிகலா நாளை பரோல் மனு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.