சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதை மத்திய அரசு காலம் தாழ்த்தி வரும் நிலையில், மத்திய அரசு சொல்லும் எல்லாவற்றுக்கும் எங்களால் ஆட முடியாது என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக தெரிவித்துள்ளார்.

உச்சநீதி மன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தாமதப்படுத்தி வரும் மத்திய அரசுக்கு எதிராக நேற்று சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசின் பினாமி அரசு என்று அழைக்கப்பட்டு  வந்த அதிமுக அரசு, சமீப காலமாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக பேசி வருகிறது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை  அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் நேற்றைய சிறப்பு தீர்மானம் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர்,  மத்திய அரசு சொல்லும் எல்லாவற்றுக்கும் எங்களால் ஆட முடியாது. எங்கள் கட்சிக்கென கொள்கைகளும் லட்சியங்களும் உள்ளன. காவிரி விஷயத்தில் ஜெ.வின் கொள்கைகளை பின்பற்று வோம்… அதிலிருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம்.

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட சட்டரீதியாகவும், அதிகளவில் போராட்டங்களை யும் முன்னெடுத்தது அதிமுக. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீருவோம்.  அதனை அமைக்காமல் ஓயப்போவதில்லை. காவிரி ஒழுங்காற்றுக் குழுவையும் அமைக்க போராடுவோம்” என்றும் மாநில உரிமை களைக் காப்போம் என்றும் கூறினார்.

மேலும், பட்ஜெட் குறித்த கேள்விக்கு,  ”விவசாயிகள், நெசவாளர்கள், பின்தங்கியவர்கள், மிகவும் பின்தங்கியவர்கள், பழங்குடியினர், சீர்மரபினர் என அனைத்து தரப்பட்ட மக்களையும் கைதூக்கிவிடும் வகையில் தமிழக அரசின் பட்ஜெட்டில் 77,000 கோடி ரூபாய்க்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் சமூக நீதி பேணப்படுகிறது என்று கூறினார்.

மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து கருத்துதெரிவித்தவர்,  தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவளிப்பது குறித்து, கட்சித் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.