சென்னை:
சென்னை அருகே உள்ள காலவாக்கம் எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியின் கலாச்சார நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல், நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மாணவர்களிடையே கலந்துரையாடினார்.
அப்போது, மாணவர்கள் அரசியலை கண்காணிக்க வேண்டும் என்றம், மறந்ததாலேயே இன்று இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்ற அவர் மக்களாட்சி மலர வேண்டும் என்றால் மாணவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
தனியார் பொறியியல் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல், மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். மாணவர்கள் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு ஆங்கிலத்திலும், தமிழில் கேட்கப்பட்டகேள்விக்கு தமிழிலும் பதில் அளித்தார். அதைத் தொடர்ந்து மாணவர்களிடையே உரையாற்றிய கமல், மாணவர்கள் அரசியல்வாதி யாக வேண்டும் என்று சொல்லவில்லை, ஆனால் அரசியலை கண்காணிக்க வேண்டும் என்று கூறினார்.
நான் இங்கு தொண்டர்களைப் பார்க்கவில்லை என்றும் இங்கு இருப்பவர்கள் அனைவருமே தலைவர்கள்தான் என்ற கமல், பள்ளி தாண்டாத என்னை கலை தான் காப்பாற்றியது. கலை என்ற பாதையைக் கொண்டு முன்னேறியவன் நான். என் பாதையை தேர்ந்தெடுக்கும் உரிமையை தந்த பெற்றோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். எங்கள் வீட்டில் பெண்கள் அதிகம். நான் அவர்களுடனே வளர்ந்தவன். ஆகவே நான் பெண்களை கொண்டாடுகிறேன் என்றும். மகளிர் தினத்தை ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும். மாணவர் சமுதாயத்தோடு இணைந்து மீண்டும் கற்றுகொள்ள விரும்புகிறேன்.
வீட்டு சாவி கொடுக்கும் பெண்களிடம் நாட்டை ஒப்படைப்பதில் ஏன் தயங்க வேண்டும். நான் பெண்களை கொண்டாடுகிறவன். பெண்கள் போற்றுதலுக்குரியவர்கள். இதனை பல காலமாக முன்னோர்கள் சொல்லி வருகின்றனர் என்றார்.
மேலும், உங்கள் வாழ்வை மாற்றி அமைக்கும் சக்தியாக அரசியல் உள்ளது . மாணவர்கள் அரசியலைக் கண்காணிக்க வேண்டும். மறந்ததால்தான் இந்த நிலை உள்ளது என்றார்.
தற்போது மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே அரசியல் பயணம் செய்து வருகிறேன் என்ற அவர், நான் இங்கு, தொண்டர்களைப் பார்க்கவில்லை. இங்கு இருப்பவர்கள் அனைவருமே தலைவர்கள். மக்கள் நீதி மய்யம், உங்களைப் போன்ற வர்களையே அழைக்கிறது என்றும், என்னை ஆதரித்தோ எதிர்த்தோ நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.
வாக்களிப்பது உங்கள் உரிமை. உங்கள் பொறுப்பு என்று பேசிய கமல், நான், உங்களுள் ஒருவனாக இருக்கவே விரும்புகிறேன். மக்கள் ஆட்சி மலர வேண்டும் என்றால், அதை மக்கள்தான் மலரச்செய்ய வேண்டும்.
மய்யம் என்றால், நடுவில் இருந்துகொண்டு இரண்டு பக்கமும் பார்த்து உங்கள் அறிவிற்கு நியாயமான, மனதிற்கு நேர்மையான முடிவை எடுத்தல். மய்யத்தில் இருப்பதை அனைவரும் கிண்டல் செய்கிறார்கள். ஆனால், அப்படி வாழ்வது மிகவும் கடினமான காரியம். அதை நான் செய்ய முயற்சிக்கிறேன்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட, நம் நாடு ஒரு சிறந்த மய்யமாக வளரும்.
இவ்வாறு கமல் பேசினார்.