சென்னை:

றுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா கார் ஓட்டுநர் அய்யப்பன் இன்று  2வது முறையாக ஆஜரானார்.

ஏற்கனவே கடந்த மாதம் 23ந்தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜரான நிலையில், இன்று மீண்டும் ஆஜராகி உள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம்   சேப்பாக்கம் கலசமகாலில் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆணையம் ஜெ. மரணம் குறித்து ஜெயலலிதாவின் ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிரு‌ஷணன், முன்னாள் தலைமை  செயலாளர்கள் வெங்கடரமணன், முன்னாள் டி.ஜி.பி. ராமானுஜம், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அவரது கணவர் மாதவன், சசிகலாவின் உறவினர்கள்,  அரசு டாக்டர் பாலாஜி, அப்பல்லோ மருத்துவர்கள், திமுகவை சேர்ந்த டாக்டர் சரவண்ன், அதிமுக முன்னாள் எம்.பி., மனோஜ்பாண்டியன், ஜெ.வீட்டு சமையல் காரர், உதவியாளர், கார் டிரைவர், சசிகலாவின் உதவியாளர்,  பொதுமக்கள் என பலரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

பலரிடம், விசாரையில் கிடைக்கும் தகவல்களை தொடர்ந்து மீண்டும் வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் அய்யப்பனும் இன்று 2வது முறையாக  விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.

ஏற்கனவே கடந்தமுறை நடைபெற்ற விசாரணையின்போது, 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் இருந்து அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்?  ஜெயலலிதா உடல் நலம் சரியில்லை என்று உங்களுக்கு எப்போது தெரிய வந்தது? உங்களுக்கு தகவல் கொடுத்தது யார்? என்றும் கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் அய்யப்பன் இன்றும் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். அவர் மறைந்த ஜெயலலிதாவிடம் 10 ஆண்டுகளுக்கு மேலாக கார் ஓட்டுநராக  பணிபுரிந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.