மதுரை:

ச்சம்பட்டியில் காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சித்ரா தேவி சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் செய்து வருகிறார்கள்.

மதுரை திருமங்கலத்தை அடுத்த நடுவக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் மணிப்பாண்டி, பேச்சியம்மாள்  தம்பதி. இவர்களது  மகள் சித்திராதேவி. வயது 14. இவர் திரளியை அடுத்த அச்சம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த சந்தானம் என்பவரின் மகன் பாலமுருகன் (23), ஒருதலையாக காதலித்துள்ளார். இவர் மாணவியிடம் தன்னை காதலிக்கும்படி பள்ளிக்கு சென்று வரும்போது அடிக்கடி கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதனை பெற்றோரிடம் சித்திராதேவி தெரிவித்ததை அடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாணவியின் தந்தை மணிபாண்டி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பாலமுருகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

 

 

 

இதனால் பாலமுருகன் ஆத்திரத்தில் இருந்தார். இந்த நிலையில் காதலர் தினத்தன்று தனது காதலை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தியுள்ளார். . அப்போதும் மாணவி மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் கடந்த 16ம் தேதி பள்ளி முடிந்து பேருந்துக்காக காத்திருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்து மாணவியின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிவிட்டார்.

அக்கபக்கத்தில் இருந்தவர்கள் தீயை அனைத்து மாணவியை திருமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சித்ராதேவி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

தற்போது அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் செய்து வருகிறார்கள்.

“கடந்த 12ம் தேதியே திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.