டில்லி:
ராஜஸ்தான் இடைத்தேர்தலில் அம்மாநில ஆளுங்கட்சியான பாஜக தோல்வி அடைந்தது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உ.பி.யில் காலியாக உள்ள கோராக்பூர், புல்பூர் லோக்சபா தொகுதிகளுக்கு மார்ச் 11ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாய நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் யோகி ஆதித்யநாத் கோராக்பூர் தொகுதியில் 5 முறை வெற்றி பெற்று முதல்வர் பதவி ஏற்பதற்காக ராஜினாமா செய்தார். இதேபோல் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா புல்பூர் தொகுதியில் இருந்து ராஜினாமா செய்தார். இருவரும் கடந்த செப்டம்பர் 21ம் தேதி ராஜினாமா செய்தது முதல் இந்த இரு தொகுதிகளும் காலியாகவுள்ளது. இந்த இரு தொகுதிகளின் வெற்றியும் பாஜகவுக்கு கவுரவ பிரச்னையாக அமைந்துள்ளது.
கோராக்பூர் தொகுதியில் தான் யோகி ஆதித்யாநாத்தின் கோராக்நாத் கோவில் அமைந்துள்ளது. கேசவ் பிரசாத் மவுரியா முதல் முறையாக புல்பூர் தொகுதியில் போட்டியிட்டு 2014ம் ஆண்டு வெற்றி பெற்றார். இது மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு போட்டியிட்ட தொகுதியாகும். அதோடு மாயாவதி கட்சி செல்வாக்கு மிகுந்த தொகுதியாகவும் முன்பு இருந்தது.
லோக்சபாவில் பாஜகவுக்கு தற்போது 274 எம்.பி.க்கள் உள்ளனர். 2014ம் ஆண்டு தேர்தலில் 282 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளுக்கு மேல் தனது சொந்த பலத்தில் பாஜக உள்ளது.
கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களுடன் பலம் நிறைந்த கட்சியாக பாஜக உள்ளது. 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் 25 இடங்களையும், உ.பி.யில் 80 இடங்களில் 71 இடங்களையும் பாஜக கைப்பற்றியது.
கடந்த ஆண்டு பஞ்சாப் குர்தஸ்பூர் லோக்சபா தொகுதியை காங்கிரஸ் கட்சியிடம் பாஜக இழந்தது. மகாராஷ்டிரா, உ.பி.யில் பாஜக எம்.பி.க்கள் இறந்ததால் 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. மேலும், மகாராஷ்டிராவில் பாஜக எம்பி ராஜினாமா செய்ததால் ஒரு லோக்சபா தொகுதி காலியாக உள்ளது.
பீகாரில் அராரியா லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி முகமது தஸ்லிமுதீன் மறைவை தொடர்ந்து இங்கு இடைத்தேர்தல் மார்ச் 11ம் தேதி நடக்கிறது. இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மார்ச் 14ம் தேதி நடக்கிறது.