ஷங்கர் இயக்கத்தில் தான் நடிக்கும் 2.O திரைப்படம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என்று நடிகர்- ரஜினிகாந்த் அறிவித்தார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில், ஐந்தாவது நாளாக ரஜினிகாந்த், இன்று ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். முதல்நாளில், 31ம் தேதி அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பதாக அறிவித்தார்.
இடையில், குடும்பம், மனைவி, குழந்தைகள் முக்கியம்… ரசிகர்களுக்கு கடா விருந்து போட ஆசை…. பெற்றோரை மதியுங்கள்… என்றெல்லாம் பேசி வந்தார்.
இதற்கிடையே காலமும் நேரமும் மாறிக் கொண்டே இருக்கும் என்று நேற்று பேசினார்.
மேலும், தனது படப்பிடிப்பு அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டு வருகிறார்.
இன்று பேசும்போது, தனக்குள் இருந்த இருந்த நடிப்புத் திறமையை தெரிந்து கொண்ட முதல் நபர், தன் நண்பர் ராஜ்பகதூர்தான் என்று தெரிவித்தார்.
73ம் வருடம் முதன் முதல் சென்னைக்கு வந்த தன்னிடம் இயக்குநர் பாலசந்தர் ‘தமிழைக் கற்றுக் கொள். உன்னை உயர்ந்த இடத்தில் கொண்டு வந்து வைக்கிறேன்’ என்று தெரிவித்ததையும் கூறினார்.
பிறகு, “இந்தியாவே என்னைத் திரும்பிப் பார்க்கச் செய்தவர் இயக்குநர் ஷங்கர். அவர் இயக்கத்தில் நான் நடித்துள்ள 2.0 திரைப்படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகிறது. காலா படத்தில் வித்தியாசமான ரஜினியைக் காட்டியுள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித்” என்று ரஜினி தெரிவித்தார்.