மழை என்றாலே கொண்டாட்டம் என்பது போய், பயந்து கிடக்கிறார்கள் மக்கள். இதற்குக் காரணம் யார் என்பதை யோசிக்காமல் மழையை சபிக்கிறார்கள் பலர்.
இந்த நிலையில் மழை தன் நியாயத்தைச் சொல்வது போல.. ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.
பராசக்தி படத்தில் சிவாஜி கணேசன் பேசுவது போல் அமைக்கப்பட்டுள்ள இந்த வசனங்கள் ஒவ்வொன்றும் சாட்டையடி.
இதோ அந்த வசனங்கள்:
“கடுமையான சென்னை மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மழையை கோர்ட்டில் கொண்டு சென்று நிறுத்தினால், மழை ‘பராசக்தி’ சிவாஜி பாணியில் பேசியிருந்தால் எப்படி பேசியிருக்கும் என்று சிறிய கற்பனை….
சிங்காரச் சென்னை. விசித்திரம் நிறைந்த பல மழைகளைச் சந்தித்திருக்கிறது. புதுமையான பல வெள்ளங்களைக் கண்டிருக்கிறது. ஆகவே, நான் புதுமையான மழையும் அல்ல. அடித்து வெளுக்கும் நான் சர்வசாதாரண மழையும் அல்ல. இயற்கையோட இயற்கையாக சராசரியாக வந்து போகி்ன்ற வரப்பிரசாதம் நான்.
சென்னையிலே கனமழை பொழிந்தேன். வெள்ளத்தை விளைவித்தேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கப் போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. கனமழை பொழிந்தேன். உங்களை வெள்ளத்தில் மிதக்க விட வேண்டும் என்பதற்காக அல்ல. ஏரிகள், குளங்கள் யுனிவர்சிட்டிகளாகவும், அபார்ட்மென்ட்டுகளாக மாறி விட்டதே என்பதற்காக. வெள்ளத்தில் மிதக்க விட்டேன். நீங்களெல்லாம் படகில் ஒய்யாரமாக பயணம் செய்து செல்பி எடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல. நான் செல்ல வேண்டிய இடங்களையெல்லாம் நயவஞ்சகர்கள் ஆக்ரமித்து விட்டார்கள் என்பதற்காக.
உனக்கேன் இவ்வளவு அக்கறை. இயற்கையில் யாருக்குமே இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநலம் என்பீர்கள். என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது. உங்களிடம் இவ்வளவு திட்டு வாங்கிக் கொண்டும் மீண்டும் மீண்டும் பொழிந்து கொண்டிருக்கின்றேனே என்னைப் போல.
என்னைக் குற்றவாளி குற்றவாளி என்கின்றீர்களே.. இந்த குற்றவாளியின் வாழக்கைப் பாதையில் சற்று தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால், நான் ஓடி வந்த சென்னையின் ஏரி, குளங்கள் எவ்வளவு என்று கணக்குப் பார்க்க முடியும்.
ஓடி வர பாதைகள் இல்லை என் வழியில். பிளாட்டுகள் நிறைந்திருக்கின்றன. ஏரிகளை விட்டு வெளியேறியதில்லை நான். ஆனால், பிளாட்டுளை இப்போது தாண்டியிருக்கிறேன். சென்னை மக்களே…. என்னை திட்டுவதற்கு முன்பாக நான் கூறுவதை தயவு செய்து கேளுங்கள்.
மடிப்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை இத்திருவிடத்திலே இருந்தவன் நான். இருக்க ஒரு ஏரியா. இப்போது இருப்பது ஒரு ஏரியா. இயற்கையின் தலையெழுத்துக்கு நான் என்ன விதிவிலக்கா?
வக்கீல்: யார் செய்த தவறுக்காக நீ கனமழை பொழிந்து விட்டு, நீயே வக்கீலாக வாதாடுகிறாய்.
மழை: யார் வழக்கிற்குமில்லை. இதுவும் என் வழக்குதான். என் சுயநலத்தில் கலந்துள்ள பொதுநலவழக்கு. ஏரிகளையும், குளங்களை அழித்து விட்டு வீடுகள், அபார்ட்மென்ட், யுனிவர்சிட்டிகள் கட்டிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு நான் புத்திய புகட்ட நான் கனமழை பொழிந்ததில் என்ன தவறு.
நான் கனமழை பொழிந்தது ஒரு குற்றம். வெள்ளத்தில் மிதக்க விட்டது ஒரு குற்றம். இத்தனைக் குற்றங்களுக்கும் யார் காரணம்? என்னை சென்னை முழுவதும் சுற்றித் திரிய விட்டது யார் குற்றம்? இயற்கையின் குற்றமா? இல்லை இயற்கையை ஓரங்கட்டி ஓராயிரம் ஏரிகள், குளங்களை தூர்த்து வீடு கட்டிய மக்களின் குற்றமா? ஏரிகள், குளங்களிலெல்லாம் யுனிவர்சிட்டிகள் கட்டியது யார் குற்றம்? என் குற்றமா? அல்லது நான் வரவே மாட்டேன் என்று நினைத்து தூர்த்திய கயவர்கள் குற்றமா?
இக்குற்றங்கள் களையப்படும் வரை கனமழைகளும், ரமணர்களும் குறையப்போவதில்லை. இதுதான் எனது பயணத்தில் எந்தப் பககம் புரட்டிப்பார்த்தாலும் காணப்படும் பாடப் பகுத்தறிவு,..”
அந்த வீடியோ …