நியூஸ்பாண்ட்

புயல் வேகத்தில் அலுவலகத்தினுள் நுழைந்து, தனது இருக்கையில் அமர்ந்த நியூஸ்பாண்ட், நேரடியாக விசயத்துக்கு வந்தார்:

“சசிகலாவின் கணவர் நடராஜனை மையமாக வைத்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது உண்டு. இப்போது உடல் நலம் முடியாத முதிர்ந்த வயதில், அதிர்ச்சிகரமான சர்ச்சை கிளம்பியிருக்கிறது…”

“ஆமாம்.. உறுப்பு மாற்று சிகிச்சை விவகாரம்தானே..”

“யெஸ்.. 74 வயதான நடராஜனுக்கு பல்வேறு உடல் உபாதைகள். குறிப்பாக கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே உறுப்பு மாற்று அறுவை சிகிச்ைச செய்துகொள்வதறஅகாக சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உறுப்புமாற்று சிகிச்சையும் வெற்றிகரமாக நடந்துமுடிந்துவிட்டது.”

“ஆனால் அவருக்கு உறுப்பு தானம் அளிக்கப்பட்ட முறைதான் அதிர்ச்சிகரமான பல குற்றச்சாட்டுகள் ஏற்பட காரணமாகிவிட்டது!”

“ஆம்.. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே, கூத்தாடி வயல் கிராமத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் கார்த்திக். ஏழை குடும்பம். ப்ளக்ஸ் பேனர் ஒட்டும் தொழில் செய்து வந்தார்.

கடந்த  செப்டம்பர் மாதம் 30ம் தேதி, பைக்கில் சென்ற இவர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. கார்த்திக்கு படுகாயம்.

கார்த்திக்

அவரை தஞ்சை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தார்கள்.  அங்கு அவர், மூளை நரம்பு வெடித்து, மூளைச்சாவு நிலையை அடைந்து விட்டதாக  சொல்லப்படுகிறது. ஆனாலும் நம்பிக்கையில் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், அவரை மேல் சிகிச்சைக்கு கொண்டுபோவதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இதற்கு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கேயே தொடர்ந்து சிகிச்சை பெறலாம் என்று கூறினர். ஆனால் அவர்களது அறிவுரையை மீறி கார்த்திக் கொண்டு செல்லப்பட்டார்.

தஞ்சை அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் ஆம்புலன்சில், திருச்சி விமான நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டார் கார்த்திக். அங்கிருந்து நள்ளிரவில் விமானத்தில்.. ஏர் ஆம்புலன்சில் சென்னை கொண்டுவரப்பட்டார். அந்த ஏர் ஆம்புலன்ஸ்  கோவை கங்கா மருத்துவமனை நிர்வாகத்துக்கு சொந்தமானது. பிறகு சென்னை குளோபல் மருத்துவமனையில், கார்த்திக்கின் உடல் உறுப்புகள் நடராஜனக்கு பொறுத்தப்பட்டன!”

“இதில் எங்கிருந்து பிரச்சினை கிளம்பியது?”

“இந்த விசயத்தில் ஆரம்பத்தில் இருந்தே தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், அரசு உறுப்பு தான ஆணையத்தின் தலைவர் – மருத்துவர் பாலாஜியும் அதீத அக்கறை எடுத்துக்கொண்டு செயல்பட்டார்கள்.”

“ஜெயலலிதா கைரேகை விவகாரத்தில் சிக்கினாரே அந்த மருத்துவர்தானே இந்த பாலாஜி.  அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த மருத்துவருக்கு பணம் கொடுத்ததாகவும் சர்ச்சை கிளம்பியதே..”

விஜயபாஸ்கர் பணம் பாலாஜிக்கு பணம் அளித்தாக எழுந்த சர்ச்சை

“ஆமாம் ஆமாம்… இவருக்கு தருமபுரி மருத்துவக் கல்லூரியில் இருந்து முறைகேடாக பதவி உயர்வு தரப்பட்டு, சென்னைக்கு மாற்றல் தரப்பட்டது. பிறகு  உறுப்பு தான் திட்ட செயலர் பதவியும் தரப்பட்டது. இந்த பொறுப்பில் இருப்பவர்தான், தமிழகம் முழுதும்  உறுப்பு மாற்று சிகிச்சைக்கு உறுப்புகள் அளிக்கப்படுவதை கண்காணிப்பதும், முறைப்படுத்துவதும்..”

“ஓ..”

“ஆம்… சட்டத்துக்குப் புறம்பாகவே கார்த்திக்கின் உடல் எடுக்கப்பட்டிருக்கிறது என்று மருத்துவ வட்டாரத்தில் அதிர்ச்சியும், வேதனையுமாக தெரிவிக்கிறார்களாம்.”

“அப்படி என்ன விதிமீறல்கள்..?”

”தஞ்சை மருத்துவமனையில் கார்த்திக்குக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியதை மீறி, கார்த்திக்கை எடுத்துச் சென்றிருக்கிறார்கள் குடும்பத்தினர். அதுவும் மேல் சிகிச்சைக்காக போகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் கார்த்திக்கிடமிருந்து உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

உடல் உறுப்பு எடுக்கப்பட்டு உறுப்புகள் மட்டும் விமானத்தில் எடுத்துச்சென்று பொறுத்தப்படுவதைத்தான் இதுவரை பார்த்திருக்கிறோம். ஆனால் நபரையே அழைத்துச் சென்று உறுப்புகளை எடுத்ததும் புதிதாய் இருக்கிறது என்று ஆச்சரியப்படுகிறார்கள்.

தவிர, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் பலரை தாண்டி நடராஜனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்றும் புகார்கள் சொல்லப்படுகின்றன..”

“ஹூம்.. நடராஜன் என்றாலே சர்ச்சைதானோ..”

கார்த்திக் – நடராஜன்“இன்னும் கேளும்.. அந்த இளைஞர் கார்த்திக்கின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே, கூத்தாடி வயல் கிராமம்தான். அவரது பெற்றோர் நடராசன் – பார்வதி.

அவர்களது வீட்டுக்கு செய்தியாளர்கள் சிலர் சென்றிருக்கிறார்கள்.  மிகச்சிறிய குடிசை வீடு. தட்டி வைத்துத்தான் கதவு என்ற பெயரில் அடைத்து வைத்திருக்கிறார்களாம். செய்தியாளர்கள் சென்றபோது தட்டி (கதவு) அடைக்கப்பட்டிருந்திருக்கிறது. வீட்டில் யாரும் இல்லை. கார்த்திக்கின் குடும்பத்தினர் நடராஜனின் ஆதரவாளர்கள் பிடியில் இருப்பதாக ஊரில் பேசிக்கொள்கிறார்கள்.”

“அடப்பாவமே.. அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்கிறதே..!”

“ஆம்.. தவிர கார்த்திக் என்ற அந்த இளைஞரின் பெற்றோர்தான் பணத்துக்கு ஆசைப்பட்டு இப்படி செய்துவிட்டதாக, அவர்களது மூத்த மகள் பிரேமலதாவே.. அதாவது கார்த்திக்கின் அக்காவே வருத்தத்தில் இருக்கிறாராம்.”

பிரேமலதா

“அய்யோ..”

“தவிர ஊரில் வேறு ஒன்றும் பேசிக்கொள்கிறார்கள். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியி்ன் மெடிக்கல் ரிப்போர்ட் எப்படி நடராஜன் தரப்புக்கு கிடைத்தது என்றும் ஆச்சரியப்படுகிறார்கள்.”

“ஓ.. நியாயமான ஆச்சரியம்தான்..”

“அந்த இளைஞர் கார்த்திக்கின் குடும்பத்தாரிடம் பேசி, அவர்களை உறுப்பு தானம் அளிக்கவைத்ததில் அறந்தை “மக்கள் உறுப்பினரும்” ஆளும் தரப்பின் நகரச் செயலாளரும்தான் முக்கிய பங்கு வகித்தார்களாம். “அங்கே” அரைக்கோடி வாங்கி “இங்கே” ஐந்து எல் மட்டும் கொடுத்து, கார்த்திக் குடும்பத்தினரை ஏமாற்றிவிட்டார்கள் என்றும் அறந்தாங்கியில் மக்கள் பேசிக்கொள்கிறார்கள்..!”

“அடக்கொடுமையே” என்று நாம் அதிர்ச்சியில் வாய் பிளக்க.. நியூஸ்பாண்ட் கிளம்பினார்.