சென்னை,
தமிழகத்தில் ரமலான் நோன்பின்போது இஸ்லாமியர்கள் பயன்பெறும் வகையில் 4900 டன் அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இதன் காரணமாக சுமார் 3 ஆயிரம் பள்ளிவாசல்கள் பயன்பெறும் என்றும் கூறி உள்ளது.
இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
”கடந்த ஆண்டுகளைப் போலவே, இவ்வாண்டும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. ங
இஸ்லாமிய மக்களின் கோரிக்கையினை ஏற்று, இந்த ஆண்டும் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்கள் சிரமமின்றி அரிசி பெறுவதற்கு ஏதுவாக மொத்த அனுமதி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.
ஆவணங்களை உரிய ஆய்வு செய்து பள்ளிவாசல்களுக்குத் தேவையான அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, 4900 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால் அரசுக்கு 12 கோடியே 60 லட்சம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.
இதன் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 3000-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் பயன் அடையும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.