சென்னை,

மிழ்நாட்டில் இந்த ஆண்டு முதல் பிளஸ்-1 க்கும் பொதுத்தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கான அரசாணை இன்னும் ஒரிரு நாட்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அதுகுறித்த விரிவான தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிளஸ்1 தேர்வில் வெற்றிபெறா விட்டாலும், தொடர்ந்த பிளஸ் 2 படிக்கும் வகையிலே, இந்த பொது தேர்வு வழி செய்யும் என்று கூறப்படுகிறது.

‘பிளஸ் 1க்கு கட்டாயம் பொது தேர்வு நடத்த வேண்டும்’ என, அண்ணா பல்கலையின் கல்வி கவுன்சில் கூடி, பள்ளிக்கல்வித் துறைக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளது.

இது குறித்து, நிபுணர்களிடம் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.  இதை யடுத்து, பிளஸ் 1க்கு, இந்த ஆண்டே பொது தேர்வு நடத்த, கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து பள்ளிகளும், பிளஸ் 1 வகுப்புகளை கட்டாயம் நடத்த வேண்டும். ஆண்டு இறுதியில், அரசு தேர்வுத் துறை மூலம், மாநிலம் முழுமைக்கும் பொதுவாக, பிளஸ் 1 பொது தேர்வு நடத்தப்படும்

அந்த மாணவர்கள், பிளஸ் 2 பொது தேர்வு முடித்த பின், இரண்டு தேர்வுக்கும் சேர்த்து, ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்

இரண்டு ஆண்டு படிப்பிலும், ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டால், உயர்கல்விக்கு செல்ல முடியாது

இரண்டு ஆண்டு மதிப்பெண்களுக்கும், சமமான, ‘வெயிட்டேஜ்’ வழங்கப்பட்டு, இன்ஜி., மற்றும் மருத்துவத்தில், ‘கட் ஆப்’ மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ள இந்த நடைமுறை, ஆந்திரா மற்றும் கேரளாவிலும் அமலில் உள்ளது.

பள்ளிக்கு வராத தனித்தேர்வர்கள், 10ம் வகுப்பு, பிளஸ் 2வில், பொது தேர்வு எழுத அனுமதிக்கப் படுகின்றனர். இவ்வாறு பிளஸ் 2 தேர்வு எழுதுவோர், பிளஸ் 1 பாடம் படித்து, தேர்வு எழுதுவதில்லை.

ஆனால், அரசு கொண்டு வரும் புதிய உத்தரவில், பிளஸ் 1க்கும் பொது தேர்வு வருகிறது. எனவே, தனித்தேர்வர்களும், பிளஸ் 1 பொதுத் தேர்வை எழுத வேண்டும் என, புதிய விதிகள் சேர்க்கப்பட உள்ளன.

பிளஸ் 2 தேர்வில், 100 சதவீத தேர்ச்சிக்காக, பிளஸ் 1 தேர்வில், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள், தனியார் பள்ளிகளால் வெளியேற்றப் படுகின்றனர். பிளஸ் 1க்கு பொது தேர்வு வந்தால், அதில், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள், பிளஸ் 2 படிக்க முடியாத நிலை ஏற்படும்.

இதை கருத்தில் கொண்டு, பிளஸ் 1 பொது தேர்வு முடித்து, மாணவர்கள் பள்ளிப் படிப்பை நிறுத்தி விடாமல் தடுக்க, புதிய அரசாணையில் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, பிளஸ் 1ல், மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டாலும், பிளஸ் 2வுக்கு செல்லலாம்.

அவர், பிளஸ் 2 சேர்ந்தவுடன், சிறப்பு துணை தேர்விலோ அல்லது டிசம்பரில் நடக்கும் துணை தேர்விலோ, தோல்வி அடைந்த, பிளஸ் 1 பாடத்துக்கு தேர்வு எழுதி, தேர்ச்சி பெற வேண்டும்.

கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வின்போது தேர்வாக பாடங்களை அடுத்த செமஸ்டரின்போது தேர்வு எழுத முடியும். அதேபோல தற்போது பிளஸ்1-ல் தேர்வாக பாடங்களை பிளஸ்2 படித்துக்கொண்டே பெயிலான பாடங்களை திரும்ப எழுதும் வசதி செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற வசதிகள் பிளஸ்1-ல் அமல்படுத்தப்பட்டால், அந்த மாணவர்களின் பிளஸ்2 படிப்பு பாதிக்கப்படும் எனவும், இதன் காரணமாக பிளஸ்2 பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதமும், மதிப்பெண் விகிதமும் பாதிக்கப்படும் என  கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.