அதிமுகவின் இரு அணிகளும் இணைப்பு குறித்து இன்று (26.04.2017) மாலை பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில் இன்று காலை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் வைக்கப்பட்டிருந்த சசிகலா மற்றும் தினகரன் படங்களுடன் கூடிய பேனர்கள் அகற்றப்பட்டன.
“இணைப்பு குறித்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமானால், கட்சியில் இருந்து சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் விலக்கிவைக்கப்பட வேண்டும்” என்று ஓபிஎஸ் அணியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் இதை ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் ஏற்காதது போலவே பேசி வந்தனர். திண்டுக்கல் சீனிவாசனும், “தினகரன், சசிகலாவை ஒதுக்கிவைக்க முடியாது” என பேசினார்.
ஆனால் இதற்கெல்லாம் மாறாக இன்று காலை தினகரன் மற்றும் சசிகலா பேனர்கள் தலைமையகத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.
இந்த திடீர் நடவடிக்கைக்கு காரணமாக சொல்லப்படுவது இதுதான்:
நேற்று இரவே இரு அணிகளும் ரகிசிய பேச்சுவார்த்தையை துவக்கிவிட்டன. சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள விடுதி ஒன்றில் இரவு 2 மணி வரை இந்த பேச்சுவார்த்தை நடந்தது.
சுமார் பத்து மணிக்கு, டிடிவி கைது செய்யப்பட்ட தகவல் இவர்களுக்கு தெரியவந்தது.
ஏற்கெனவே கட்சி பொதுச் செயலாளர் சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். தற்போது தினகரனும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆகவே இனி அவர்களது ஆதிக்கம் கட்சியில் இருக்காது என்ற நம்பிக்கையில் பேனர்கள் அகற்றப்பட்டிருக்கலாம்.