சென்னை: ‘அரசியலுக்காக மேகதாது அணையை வைத்து சர்ச்சை செய்து வருகிறார் கர்நாடக மாநில துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் என தமிழ்நாடு அமைச்சர் நிர்மல் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் நிர்மல் குமார், அரசியல் காரணங்களுக்காக, இரு மாநில மக்களிடையே பிளவை ஏற்படுத்துகிறார் என்று கூறினார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான அறிக்கை தயார் செய்ய எந்த தடையும் இல்லை என்று அதுதொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அணை கட்டுவதற்கான திட்டத்தை விரைவாக முன்னெடுக்க முடிவு செய்துள்ளதாக கர்நாடக அரசு கூறியுள்ளது. இதுகுறித்து செய்தியளார்களிடம் பேசிய கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் , மேகதாதுவில் நிச்சயமாக அணை கட்டியே தீருவோம். தமிழக அரசு என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டிற்கு கர்நாடக மக்களன் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முடிவை முன்னெடுத்துச் செல்வோம். இதுதொடர்பான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளோம் என்றார். இந்த தகவல் தமிழக விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும், அதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், மேகதாதுவில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை மட்டுமே உச்சநீதிமன்றம் கேட்டுள்ளதாகவும், இந்த இடைப்பட்ட சமயத்தில் அவர்கள் பூமி பூஜை செய்ய முடியாது எனவும், ஆனால், அப்படி செய்து, தேவையில்லாமல் இரு மாநிலங்களுக்கு இடையே சட்டம் ஒழுங்கு பிரச்னையை கொண்டுவருவதற்கான முயற்சிகளை அவர்கள் மேற்கொள்வதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், அரசியல் காரணங்களுக்காகவே டி.கே. சிவக்குமார் அவ்வாறு செய்வதாகவும், அதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதாகவும் அமைச்சர் கூறினார். இரு மாநிலங்களுக்கும் அமைதி தேவை என்றும், இரு மாநில மக்களிடையே தொழில் உறவுகளும் நிறைய உள்ளதாகவும், ஆனால், அரசியல் காரணங்களுக்காக தேவையில்லாமல் டி.கே. சிவக்குமார் இதுபோல் செய்துவருவதாகவும், இதுபோல் சர்ச்சையை கிளப்புவதை அவர் நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவாக முடிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், நிச்சமாக அனைத்து வழக்குகளையும், குறிப்பாக பெண்கள் தொடர்பாக மகிளா நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
எங்கெங்கு ஊழியர்கள் பற்றாக்குறை இருக்கிறது என்று கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும், எங்கெங்கு நீதிமன்றங்கள் தேவைப்படுகிறதே அதை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறிய அவர், நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும், குறிப்பாக போக்சோ வழக்குகளை விரைவாக முடிப்பதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாவும், அது தேர்தல் வாக்குறுதியிலேயே உள்ளதால், அதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டு விரைவில் செய்து முடிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
[youtube-feed feed=1]