டெல்லி: சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் மும்மொழி கொள்கைக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு, என்.சி.இ.ஆர்.டி. பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் கட்டாய மும்மொழிக் கொள்கைக்கு எதிரான வழக்கில், சிபிஎஸ்இ மற்றும் என்சிஇஆர்டி-யின் பதில்களை உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது. இக்கொள்கையைச் செயல்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டியவாறே, நீதிமன்றம் பதில்களைக் கோரியது.

மத்தியஅரசு, தேசிய கல்விக்கொள்கை 2020 மற்றும் தேசிய கலைத்திட்ட கட்டமைப்பு 2023 ஆகியவற்றின் அடிப்படையில், வரும் ஜூலை 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழிகள் (R1, R2, R3) கட்டாயமாக்கப்படும் என்று சிபிஎஸ்இ கடந்த மே 15 அன்று சுற்றறிக்கை வெளியிட்டது.
அதன் தொடர்ச்சியாக, சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகளில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழிகளைக் கட்டாயமாக்கும் புதிய கொள்கையை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் புதன்கிழமை ஒப்புக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு, சிபிஎஸ்இ மற்றும் என்சிஇஆர்டி (NCERT) ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள நீதிமன்றம், இரண்டு வாரங்களுக்குள் விரிவான பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான சிபிஎஸ்இ-யின் தயாரிப்புகள் மற்றும் தளவாட வசதிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டியிடம் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் மனுதாரர் யாஷிகா பண்டாரி ஜெயின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, “அடுத்த கல்வியாண்டு முதல் மாணவர்கள் மூன்று மொழிகளைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ நாடு தழுவிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது” என்றார்.
மற்றொரு மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “இந்த விவகாரம் கூட்டாட்சி தத்துவம் மற்றும் தனிமனித உரிமை சார்ந்த அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளுடன் தொடர்புடையது.
மொழி என்பது ஒருவரின் விருப்பம் சார்ந்த விஷயம், அதை யாருக்கும் கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது” என்று வாதிட்டார்.
இருப்பினும், இக்கொள்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், ஜூலை மாதம் வழக்கை விரிவாக விசாரிப்பதாகத் தெரிவித்தது.
சிபிஎஸ்இ-யின் 3-மொழி சுற்றறிக்கை என்ன சொல்கிறது?
தேசிய கல்விக்கொள்கை (NEP) 2020 மற்றும் தேசிய கலைத்திட்ட கட்டமைப்பு (NCF-SE) 2023 ஆகியவற்றின் அடிப்படையில், வரும் ஜூலை 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழிகள் (R1, R2, R3) கட்டாயமாக்கப்படும் என்று சிபிஎஸ்இ கடந்த மே 15 அன்று சுற்றறிக்கை வெளியிட்டது. இதில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய உள்நாட்டு மொழிகளாக இருக்க வேண்டும்.
வெளிநாட்டு மொழியைப் படிக்க விரும்பும் மாணவர்கள், அதை இரண்டு இந்திய மொழிகளுக்குப் பிறகு மூன்றாவது மொழியாகவோ அல்லது கூடுதலாக நான்காவது மொழியாகவோ மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்.
*மாணவர்களின் சுமையைக் குறைக்க, 3வது மொழிக்கு (R3) 10ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு நடத்தப்படாது. இதற்கான மதிப்பீடுகள் அனைத்தும் பள்ளி அளவிலேயே உள்மதிப்பீடாக (Internal Assessment) நடத்தப்படும். இந்த மதிப்பெண் சான்றிதழில் பிரதிபலிக்கும், ஆனால் இதில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் மாணவர்கள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
*3வது மொழிக்கான பிரத்யேக புத்தகங்கள் கிடைக்கும் வரை, 9ஆம் வகுப்பு மாணவர்கள் 6ஆம் வகுப்பிற்கான புத்தகங்களைப் பயன்படுத்தலாம். 19 அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளுக்கான புத்தகங்கள் ஜூலை 1க்கு முன் வழங்கப்படும்.
*ஆசிரியர்கள் பற்றாக்குறை: தகுதியான மொழி ஆசிரியர்கள் இல்லாத பட்சத்தில், தற்காலிக ஏற்பாடாக அந்த மொழியில் அடிப்படைத் திறன் கொண்ட பிற பாட ஆசிரியர்களைப் பயன்படுத்தலாம் அல்லது ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஆன்லைன் வகுப்புகள் மூலம் உதவிகளைப் பெறலாம் என சிபிஎஸ்இ கூறியுள்ளது.
*மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும், வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் மாணவர்களுக்கும் இதில் இருந்து சில தளர்வுகள் வழங்கப்படும்.
கணிதம், அறிவியலில் புதிய மாற்றங்கள்:
இதே கல்வியாண்டில் (2026-27), 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் ‘இரண்டு அடுக்கு’ (Two-level system) தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதில் அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான 80 மதிப்பெண் ‘ஸ்டாண்டர்ட்’ (Standard) தேர்வு நடத்தப்படும். அதே சமயம், உயர்கல்வியில் ஆர்வம் கொண்ட மாணவர்கள், தங்களின் கூடுதல் திறனை நிரூபிக்க ‘அட்வான்ஸ்டு’ (Advanced) தேர்வையும் எழுதலாம். இந்த புதிய முறையின் கீழ் முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2028இல் நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]