சென்னை: தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் விதிகள் மீறி செயல்பட்ட 20 கல்குவாரிகளை உடனடியாக மூட அமைச்சர் டி.கே.பிரபு அதிரடி உத்தரவிட்டு உள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 18 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு  உத்தரவிட்ட நிலையில்,  கன்னியாகுமரி மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 2 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியான அறிக்கையில்; தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள 54 கற்குவாரிகள் தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி உதவி ஆட்சியர்களின் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு 09.05.2026 முதல், ஆய்வு செய்யப்பட்டன.

இந்நிjலையில், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே.பிரபு 25.05.2026 அன்று அதிகாலை தென்காசி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். அமைச்சரின் அறிவுறுத்தலின்படி மேற்கண்ட 3 குழுக்களின் முதல்கட்ட புலத்தணிக்கையின் போது மொத்தமுள்ள 54 கற்குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 18 கற்குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகின்றன.

அதுபோல குமரி மாவட்டத்தில்  விதிகள் மீறி செயல்பட்டு வந்த2 குவாரிகளையும் தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளார். மேலும், மேற்படி 3 குழுக்களின் விரிவான ஆய்வறிக்கையின் அடிப்படையில் உரிய மேல்நடவடிக்கை தொடரப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக,  தென்காசி மாவட்டம், புளியரை, தமிழக- — கேரள எல்லை சோதனைச்சாவடி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான கனிமவள லாரிகள், கேரள மாநிலத்துக்கு சென்று வருகின்றன. இதில், முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் எழுந்த நிலையில், கனிமவளத்துறை அமைச்சர் பிரபு,  மே 24ந்தேதிஅன்று  நள்ளிரவில் திடீரென சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்டார்.

கேரளா செல்லும் லாரிகள் மற்றும் அனுமதி பாஸ்கள் குறித்து, அமைச்சர் ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். இதற்கிடையே, தென்காசி மாவட்டத்தில் செயல்படும் கல்குவாரிகள் குறித்து கலெக்டர் கமல் கிஷோருக்கு பல புகார்கள் வந்தன. அவரது உத்தரவில், கனிமவளத்துறையினர் நடத்திய ஆய்வில், 54 குவாரிகளில், 18 குவாரிகளில் முறைகேடு இருப்பது தெரியவந்தது. அந்த, 18 குவாரிகளையும் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், விரிவான ஆய்வுக்கு பின், மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கனிமவளத்துறையினர் தெரிவித்தனர்.

[youtube-feed feed=1]