போலி இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியான அவதூறு கருத்து தொடர்பாக, தன்னை விசாரணை என்ற பெயரில் சட்டவிரோதமாக அழைத்துச் சென்ற போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் (MIDS) இணைப் பேராசிரியர் ஏ. கலையரசன், தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள புகாரில், அக்டோபர் 28-ம் தேதி அதிகாலை 5 மணியளவில், சென்னை அடையாறில் உள்ள தனது வீட்டுக்கு சாதாரண உடையில் வந்த 3 போலீசார், தனது செல்போனைப் பறித்துக்கொண்டு விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பல்லாவரம் தொகுதி தவெக எம்எல்ஏ ஜெ. காமாட்சி குறித்து இன்ஸ்டாகிராமில் அவதூறு கருத்து பதிவிட்டதாகக் கூறி, பம்மலில் உள்ள சங்கர் நகர் காவல் நிலையத்துக்கு வருமாறு போலீசார் அழைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அந்தக் கருத்தைத் தான் பதிவிடவில்லை என்றும், தனக்கு இன்ஸ்டாகிராம் கணக்கே இல்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும், தன்னை விசாரணைக்கு அழைத்துச் செல்வதற்கான ஆவணங்களையோ, புகார் நகல் அல்லது முதல் தகவல் அறிக்கையையோ போலீசார் வழங்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார். குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கவும் அனுமதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
பல்லாவரத்தை அடைந்தபோது, சாலையோரத்தில் காரை சுமார் 45 நிமிடங்கள் நிறுத்தி போலீசார் தொலைபேசியில் பேசியதாகவும், பின்னர் தன்னை மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு உத்தரவு வந்துள்ளதாகக் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரும்பி வரும் வழியில், தனது புகைப்படத்துடன் வேறொரு பெயரில் இயங்கிய இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியான கருத்தின் ஸ்கிரீன்ஷாட்டை போலீசார் காட்டியுள்ளனர். அந்தக் கணக்கில் பயன்படுத்தப்பட்ட தனது புகைப்படம், ஹார்வர்டு பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்ட புகைப்படம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த இன்ஸ்டாகிராம் கணக்குக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று எழுத்துப்பூர்வமாகக் கடிதம் அளித்த பிறகே தனது செல்போனை போலீசார் திருப்பிக் கொடுத்ததாகவும், காலை 7.45 மணியளவில் வீட்டில் இறக்கிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
தனது புகைப்படத்தைப் பயன்படுத்தி போலிக் கணக்கை உருவாக்கி, அதில் அவதூறு கருத்துகளைப் பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தன்னைச் சட்டவிரோதமாக அழைத்துச் சென்ற போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கலையரசன் டிஜிபிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரியுள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள் பொதுவிவாதங்களிலும் கல்விசார் விவாதங்களிலும் மக்கள் பங்கேற்பதற்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.