அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 1993-ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள பிளாசா ஹோட்டலில் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக முன்னாள் மாடலும், மிஸ் சுவிட்சர்லாந்து பட்டம் வென்றவருமான பீட்ரிஸ் கூல் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் உள்ள ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் திங்கள்கிழமை வெளியிட்ட விரிவான விசாரணை அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டு இடம்பெற்றுள்ளதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மறைந்த ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் கடந்த கால முறைகேடுகள் தொடர்பாக ஜனநாயகக் கட்சியினர் மேற்கொண்டு வரும் விரிவான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கூறப்படும் சம்பவம் நடந்தபோது தனக்கு 24 வயது என பீட்ரிஸ் கூல் தெரிவித்துள்ளார். ஹோட்டலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது டிரம்பைச் சந்தித்ததாகவும், பின்னர் தொழில் வாய்ப்புகள் மற்றும் கல்வி வாய்ப்புகள் பெற்றுத் தருவதாகக் கூறி ஹோட்டலின் மேல்தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல்கள் நடைபெற இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இந்த அறிக்கை அந்நாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, வெள்ளை மாளிகை இந்தக் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அரசின் கொள்கை சார்ந்த சாதனைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப ஜனநாயகக் கட்சியினர் மேற்கொள்ளும் விரக்தியான அரசியல் நாடகம் இது என்று வெள்ளை மாளிகை விமர்சித்துள்ளது.