சென்னையில் தனியார் பங்களிப்புடன் 25 நவீன பத்திரப்பதிவு மையங்களைத் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக 5 மையங்கள் தொடங்கப்பட உள்ளன.

இதற்காக, 25 மாடல் பத்திரப்பதிவு மையங்களை அமைத்து நடத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளியை பதிவுத்துறை தலைவர் அலுவலகம் அக்டோபர் 16-ம் தேதி வெளியிட்டுள்ளது.

இந்த மையங்களில் சொத்து வாங்குபவர்கள், விற்பவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி விரைவாகவும் வசதியாகவும் பத்திரப்பதிவு சேவைகளைப் பெறலாம். இதற்காக ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும். வழக்கமான பத்திரப்பதிவுக் கட்டணத்தையும் தனியாகச் செலுத்த வேண்டும்.

முதல்கட்டமாக அம்பத்தூர், திருவான்மியூர், தி.நகர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் கோயம்புத்தூர் வடக்கு ஆகிய 5 இடங்களில் இந்த மையங்கள் தொடங்கப்படும். சோதனை முயற்சி வெற்றி பெற்றால், மேலும் 20 மையங்கள் அமைக்கப்படும். அவை அமையவுள்ள இடங்கள் பின்னர் தேர்வு செய்யப்படும்.

ஒப்பந்தம் கையெழுத்தான 60 நாட்களுக்குள் முதல் 5 மையங்களும் செயல்படத் தொடங்க வேண்டும். இதற்கான முதலீட்டைத் தனியார் நிறுவனம் ஏற்கும் என்பதால், அரசுக்கு ஆரம்பகட்ட முதலீட்டுச் செலவு இருக்காது. தேர்வு செய்யப்படும் நிறுவனத்துக்கு ஒவ்வொரு மையத்துக்கும் மாதாந்திர நிலையான தொகையும், பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தில் ஒரு பங்கும் வழங்கப்படும்.

இந்த ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். தேவைப்பட்டால் மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்கலாம்.

கட்டண விவரங்கள்:

  • சாதாரண சேவை: ரூ.2,000
  • தட்கல் சாதாரண சேவை: ரூ.5,000
  • பிரீமியம் சேவை: ரூ.7,000
  • தட்கல் பிரீமியம் சேவை: ரூ.10,000

இந்தக் கட்டணங்கள் வழக்கமான பத்திரப்பதிவுக் கட்டணத்துக்கு கூடுதலாக வசூலிக்கப்படும். சாதாரண சேவைக்கான கட்டணத்தில் 75 சதவீதமும், பிரீமியம் சேவைக்கான கட்டணத்தில் 65 சதவீதமும் அரசுக்குச் செல்லும். தனியார் நிறுவனத்தின் பங்குக்கு மட்டும் 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும்.

ஆனால், பத்திரப்பதிவு தொடர்பான சட்டப்பூர்வ பணிகளை சார்-பதிவாளர்களே தொடர்ந்து மேற்கொள்வார்கள். ஆவணங்களை ஏற்றுக்கொள்வது, பதிவு செய்வது உள்ளிட்ட அதிகாரப்பூர்வ பணிகளில் தனியார் நிறுவனங்களுக்கு எந்தப் பங்கும் இருக்காது என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மையங்களை நடத்த விரும்பும் நிறுவனங்களுக்கு கடுமையான தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் சராசரி ஆண்டு வருவாய் குறைந்தது ரூ.500 கோடியாகவும், நிகர சொத்து மதிப்பு ரூ.100 கோடியாகவும் இருக்க வேண்டும். குறைந்தது 1,000 ஊழியர்கள் இருக்க வேண்டும். பாஸ்போர்ட் சேவை மையங்கள் அல்லது பத்திரப்பதிவு அலுவலகங்கள் போன்ற குறைந்தது 25 பொதுச் சேவை மையங்களை நடத்தி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், ரூ.100 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பிலான தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்புத் திட்டங்களைச் செயல்படுத்திய அனுபவமும், ஐஎஸ்ஓ மற்றும் சிஎம்எம்ஐ சான்றிதழ்களும் இருக்க வேண்டும். அதிகபட்சம் இரண்டு நிறுவனங்கள் இணைந்து கூட்டமைப்பாகவும் விண்ணப்பிக்கலாம்.

மையங்களை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டால், ஒவ்வொரு வாரத்துக்கும் ஒப்பந்த மதிப்பில் 0.5 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். இது அதிகபட்சமாக 10 சதவீதம் வரை இருக்கும். சேவை நேரம், உதவி மையத்தின் செயல்பாடு, ஊழியர்களின் வருகை உள்ளிட்ட விதிமுறைகளை மீறினாலும் அபராதம் விதிக்கப்படும்.

இதற்கான முன் ஒப்பந்தப்புள்ளிக் கூட்டம் அக்டோபர் 26-ம் தேதி நடைபெற உள்ளது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க நவம்பர் 16-ம் தேதி கடைசி நாளாகும். தொழில்நுட்ப விண்ணப்பங்கள் நவம்பர் 17-ம் தேதி திறக்கப்படும்.