சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (செப்.25), கிரானைட் தொழிலதிபர் வீரமணி என்கிற ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான POCSO வழக்கு தொடர்பான வீடியோக்களை வெளியிடவும், ஒளிபரப்பவும் ஊடகங்களுக்கு தடை விதித்தது.
நீதிபதி வி. லட்சுமிநாராயணன், இந்த விவகாரம் தொடர்பான வீடியோக்களை விசாரணை முடிவதற்கு முன்பே வெளியிடுவது, பாதிக்கப்பட்ட பிற குழந்தைகள் போலீஸ் விசாரணைக்கு வந்து வாக்குமூலம் அளிப்பதில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனத் தெரிவித்தார். இந்த விவகாரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஊடகங்கள் செயல்பட வேண்டும் என்றும், வீடியோக்களை ஒளிபரப்பாமல் வழக்கு குறித்து விவாதிக்கலாம் என்றும் கூறினார்.

“TRP-யைவிட வாழ்க்கையில் முக்கியமான விஷயங்கள் உள்ளன” என்று குறிப்பிட்ட நீதிபதி, குழந்தைகள் தொடர்பான வழக்கில் ஊடகங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், இந்த வழக்கு குறித்து செய்தி வெளியிட ஊடகங்களுக்கு உரிமை இருந்தாலும், ஊடக விசாரணை நடத்த உரிமை இல்லை என்று நீதிமன்றம் கூறியது. குற்றம் நடந்ததா, இல்லையா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்; ஊடகங்கள் முடிவு செய்யக்கூடாது என்றும் தெரிவித்தது.
வழக்கின் விசாரணை தற்போது முக்கிய கட்டத்தில் இருப்பதாகவும், மேலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்த நிலையில் விசாரணை விவரங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடப்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரிடம் வந்து வாக்குமூலம் அளிக்க தயங்கும் சூழல் ஏற்படலாம் என்றும் கூறியது.
கடந்த 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின்போது, பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களில் தொடர்ந்து வெளியான தகவல்கள், பயங்கரவாதிகளுக்கு உதவிய சம்பவத்தையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
ஊடகங்களின் செய்தி வெளியிடும் உரிமையுடன், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மட்டுமின்றி குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமைகளையும் பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இருப்பினும், ஊடகங்கள் மீது முழுமையான ‘ஜான் டோ’ உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் மறுத்தது.
அதே நேரத்தில், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையின் தாக்கம் குறித்து, இந்த வழக்கின் விவரங்களை வெளியிடாமல் ஊடகங்கள் விவாதிக்கலாம் என நீதிமன்றம் அனுமதித்தது. மேலும், வழக்கை விசாரிக்கும் தமிழக அரசின் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT), விசாரணையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் வாரத்திற்கு ஒருமுறை செய்திக்குறிப்பு வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.