கைது செய்யப்படும் நபருக்கு, அவர் ஏன் கைது செய்யப்படுகிறார் என்பதற்கான காரணங்களை எழுத்துப்பூர்வமாக வழங்காத போலீஸ் அதிகாரி மீது துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் உஜ்ஜல் புயான், அதுல் எஸ். சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசியலமைப்புச் சட்டத்தின் 22(1)-வது பிரிவின்படி, கைது செய்யப்படும் நபருக்கு கைது காரணங்களை அவர் புரிந்துகொள்ளும் மொழியில் எழுத்துப்பூர்வமாக வழங்குவது கட்டாயம் என்று தெரிவித்தது.

கைது சட்டவிரோதமாகும்

கைது காரணங்கள் எழுத்தில் வழங்கப்படாவிட்டால் அந்தக் கைது சட்டவிரோதமானதாகிவிடும். இது சாதாரண நடைமுறை விதி அல்ல; அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமைக்கான பாதுகாப்பு என்று நீதிமன்றம் கூறியது.

கைது செய்யப்பட்ட நபருக்கு கைது காரணங்களின் நகலை எந்தவித விதிவிலக்கும் இல்லாமல், முடிந்தவரை விரைவாக வழங்க வேண்டும். இந்த அடிப்படை உரிமையை மீறினால், கைது செய்யப்பட்ட நபரை உடனடியாக விடுவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலும் அல்லது நீதிமன்றம் வழக்கை எடுத்துக்கொண்டாலும், சட்டவிரோதமான ஆரம்பக் கைது சட்டபூர்வமானதாக மாறாது என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

மீண்டும் கைது செய்ய வேண்டுமெனில்…

கைது சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் அறிவித்த பிறகு, அதே நபரை விசாரணை அமைப்பு மீண்டும் கைது செய்ய விரும்பினால், முதலில் கைது காரணங்களை எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும். அதன்பிறகு சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டின் அனுமதியைப் பெற வேண்டும்.

நிர்வாக ரீதியாக, கைது காரணங்களை வழங்கத் தவறிய போலீஸ் அதிகாரி, அந்த நபரை தொடர்ந்து காவலில் வைப்பதற்கு உயர் அதிகாரியிடம் ஒப்புதல் பெற வேண்டும். மேலும், அந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வேறு ஒரு போலீஸ் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.

கைது காரணங்களை வழங்கத் தவறிய அதிகாரி மீது துறை ரீதியான விசாரணையையும் உயர் அதிகாரி உத்தரவிட வேண்டும். அந்த விசாரணையில் அதிகாரி தவறு செய்திருப்பது தெரியவந்தால், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அந்த நடவடிக்கை அவரது பணிப்பதிவேட்டிலும் பதிவு செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பின் நகலை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல்துறை தலைமை இயக்குநர்களுக்கும் அனுப்ப வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜஸ்கரன்ஜித் சிங் வழக்கில் தீர்ப்பு

சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டில், சிரோமணி அகாலி தளம் (SAD) கட்சியைச் சேர்ந்த முல்லன்பூர் தாகா தொகுதி பொறுப்பாளர் ஜஸ்கரன்ஜித் சிங் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவருக்கு கைது காரணங்கள் எழுத்துப்பூர்வமாக வழங்கப்படாததால், அவரது கைது சட்டவிரோதமானது என்று கீழமை நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்து, அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது.

இந்த உத்தரவை பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றம் நிறுத்திவைத்தது. இதையடுத்து ஜஸ்கரன்ஜித் சிங் உச்சநீதிமன்றத்தை அணுகினார். அவரது கைது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.

அரசியலமைப்பு உரிமை முக்கியம்

இந்த வழக்கில் நீதிபதி உஜ்ஜல் புயான், “ஒருவரின் தனிநபர் சுதந்திரத்தை பறிக்கும் போது, அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய பாதுகாப்புகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்” என்ற கருத்தை வலியுறுத்தினார்.

கைது காரணங்களை எழுத்தில் வழங்குவது என்பது வெறும் நடைமுறை நடவடிக்கை அல்ல. அது ஒருவரின் அடிப்படை உரிமையை பாதுகாக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியமான உத்தரவாதம் என்றும் நீதிமன்றம் கூறியது.

இந்த விதி குறிப்பிட்ட ஒரு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளுக்கு மட்டும் பொருந்தாது. இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழான குற்றங்கள் மட்டுமின்றி, சிறப்புச் சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளிலும் இந்த அரசியலமைப்புப் பாதுகாப்பு பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட நபருக்கு கைது காரணங்களை தெரிவிப்பதில் ஏற்பட்ட குறைபாட்டை, பின்னர் நடைபெறும் விசாரணை நடவடிக்கைகள் மூலம் சரிசெய்ய முடியாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பாக முந்தைய தீர்ப்புகளில் காணப்பட்ட சில வேறுபட்ட அணுகுமுறைகளையும் நீதிமன்றம் பரிசீலித்தது. குறிப்பாக Mihir Rajesh Shah Vs State of Maharashtra வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பே தற்போது பொருந்தக்கூடிய சரியான சட்ட நிலைப்பாட்டை எடுத்துரைப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. அந்தத் தீர்ப்பு அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் கட்டுப்பாடானது என்றும் கூறியது.

இதன் மூலம், ஒருவரை கைது செய்யும்போது “எதற்காக கைது செய்கிறோம்?” என்ற காரணத்தை எழுத்தில் தெரிவிப்பது போலீசாரின் கட்டாயப் பொறுப்பு என்பதை உச்சநீதிமன்றம் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.