சென்னை: பல ஆண்டு கோரிக்கையான அரக்கோணம்-காஞ்சிபுரம்- செங்கல்பட்டு இரட்டை ரயில் பாதைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை பீச்-அரக்கோணம் மற்றும் சென்னை பீச்- செங்கல்பட்டு ஆகிய இரண்டு வழித்தடங்களையும் ஒரு வட்டத்தில் இணைக்கும் செங்கல்பட்டு-அரக்கோணம் ரயில் பாதை மட்டும் ஒரு வழி பாதையாகவே இதுவரை இருந்து வருகிறது. இதனால் போதுமான அளவு ரயில்கள் இயக்க முடியாத நிலை உள்ளது. இதையடுத்து, இந்த வழித்தடத்தை இருவழி பாதையாக மாற்ற வேண்டும் என வேண்டுகள் விடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், பல ஆண்டு கோரிக்கையான அரக்கோணம்-காஞ்சிபுரம்- செங்கல்பட்டு இரட்டை ரயில் பாதைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் சுமார் 68 கிலோ மீட்டர் நீளமுள்ள பணியை முடிக்க 993 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மத்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
- வழித்தடம்: அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் வழியாக செங்கல்பட்டு வரை உள்ள ஒற்றைப் பாதை இரட்டைப் பாதையாக மாற்றப்படுகிறது.
- பயன்: இந்த வழித்தடம் சென்னை புறநகர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளை இணைக்கும் முக்கிய ரயில் பாதையாகும். இதன் மூலம் இப்பகுதியில் ரயில்களின் வேகம் அதிகரிக்கும், கூடுதல் ரயில்களை இயக்க முடியும் மற்றும் நீண்ட நேர காத்திருப்பு தவிர்க்கப்படும்.
- பட்ஜெட் மற்றும் முன்னேற்றம்: இத்திட்டத்திற்கான கருத்துக்கேட்பு கூட்டங்கள் நிறைவடைந்து, நிதி ஒதுக்கீடு குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.