டெல்லி: நாடு முழுவதும் உள்ள 1.2 மில்லியன் மெடிக்கல் கடைகள் நாளை நாடு தழுவிய ஸ்டிரைக் அறிவித்துள்ளன. ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வலியுறுத்தி இந்த ஸ்டிரைக் நடைபெற உள்ளது.
ஆன்லைன் மருந்து விற்பனையை எதிர்த்து மருந்தாளுநர்கள் (Pharmacist) மற்றும் மருந்து விற்பனையாளர்கள் போராட்டத்தை அறிவித்து உள்ளனர். நாடு முழுவதும் நாளை 12.5 லட்சத்திற்கும் அதிகமான மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அகில இந்திய மருந்தாளுநர்கள் மற்றும் மருந்து விற்பனையாளர்கள் அமைப்பால் (AIOCD) அறிவிக்கப்பட்டுள்ள இந்த வேலைநிறுத்தம், ஒழுங்குபடுத்தப்படாத ஆன்லைன் மருந்தகத் தளங்களின் வளர்ச்சி, பெருநிறுவன மின்-மருந்தகங்கள் வழங்கும் பெரும் தள்ளுபடிகள் மற்றும் குறிப்பிட்ட ஒழுங்குமுறைத் தளர்வுகளுக்கு எதிரான ஒரு போராட்டமாகும்.
முறையான மருந்துச் சீட்டு மற்றும் சரிபார்ப்பு இன்றி ஆன்லைனில் மருந்துகள் விற்கப்படுவதாகவும், ஆன்லைன் மூலம் மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரணிகள், தூக்க மருந்துகள், மற்றும் கருக்கலைப்பு மருந்துகள் எளிதாகக் கிடைப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.எனவே கொரோனா காலத்தில் தற்காலிகமாக கொண்டு வரப்பட்ட e-pharmacy செயல்பாட்டுக்கான அரசாணையை, ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என AIOCD அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக, பல மாநிலங்களில் உள்ள பெரும்பாலான சுயாதீன, நேரடி மொத்த மற்றும் சில்லறை மருத்துவக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், மக்கள் மருந்தகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையுடன் இணைக்கப்பட்ட மருந்தகங்கள், அவசர மருத்துவ சேவைகள், அரசாங்கத்தால் நடத்தப்படும் ஜன் அவுஷதி கடைகள் மற்றும் அம்ரித் மருந்தகங்கள் தொடர்ந்து செயல்படும்.
வேலைநிறுத்தத்தின் தாக்கம் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது நலன் கருதி அத்தியாவசிய மருந்துகளுக்குத் தடையற்ற அணுகலை உறுதி செய்வதற்காக, பல மாநில அளவிலான சில்லறை மருந்தக சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்திலிருந்து விலகியுள்ளன.
ஆன்லைன் மருந்து செயலிகள் மற்றும் தளங்கள் இந்த வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக இல்லை; இருப்பினும், உள்ளூர் விநியோகச் சங்கிலியைப் பொறுத்து விநியோக நேரங்கள் மாறுபடலாம்.
இந்த ஸ்டிரைக் அறிவிப்பு காரணமாக தமிழகத்தில் சுமார் 42,000 மருந்தகங்கள் நாளை மூடப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மருந்தகங்களின் போராட்ட அறிவிப்பு காரணமாக ஏற்படும் இன்னல்களை சமாளிக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
[youtube-feed feed=1]